PUBLISHED ON : ஆக 05, 2011 12:00 AM

வம்பில் சிக்காமல் தப்பிய மந்திரி...!
சென்னை மாநகராட்சியில் நடந்து வரும் பணிகள் குறித்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி ஆய்வு நடத்தினார். பெருங்குடி குப்பை வளாகம், மருத்துவமனை என, சுற்றி விட்டு மாநகராட்சி அலுவலகம் வந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டரை மணி நேர ஆலோசனைக்குப்பின், வெளியில் வந்தார். அவரிடம் நிருபர் ஒருவர், 'மாநகராட்சிப் பணிகள் முறையாக நடக்கிறதா...?' எனக் கேட்டதும், பதிலேதும் கூறாமல் அங்கிருந்து, 'விறுவிறுவென' நடந்தார். தொடர்ந்து வற்புறுத்தியதும்,'பிரஸ் நோட் வரும்...' எனக் கூறியபடியே நிற்காமல், இடத்தைக் காலி செய்தார். 'மாநகராட்சி விரிவாக்கம், உள்ளாட்சித் தேர்தல் எப்போது, உள்ளாட்சி அமைப்புகளை கலைக்கும் எண்ணம் உண்டா' என்ற கேள்விகளோடு காத்திருந்த நிருபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மூத்த நிருபர் ஒருவர், 'அவர் ஏதாவது சொல்லப் போக, நாளைக்கு, 'மாஜி' ஆயிட்டா என்ன பண்றது, அதான்... ஓடிட்டார்...' என, 'கமென்ட்' அடித்துவிட்டு நகர்ந்தார்.
கண்கலங்கிய எம்.எல்.ஏ.,!
பொள்ளாச்சி திப்பம்பட்டி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமில் பேசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயராமன், 'திப்பம்பட்டி கிராமம் கிணத்துக்கடவு தொகுதியில் இருந்து உடுமலை தொகுதிக்கு மாறியுள்ளது. திப்பம்பட்டியை சேர்ந்த நான், இந்த முறைதான் எனக்காக ஓட்டு போட்டேன். கிராமத்தில் பதிவான மொத்த ஓட்டில் 90 சதவீதம் அ.தி.மு.க., வுக்கு கிடைத்துள்ளது. கட்சி பாகுபாடின்றி பொதுமக்கள் எனக்கு ஓட்டு போட்டுள்ளனர்.
'அவர்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நானும் விசுவாசமாக பாரபட்சமின்றி செயல்படுவேன். என்னை வளர்த்து ஆளாக்கிய கிராமத்திற்காக உழைக்கும் வாய்ப்பை முதல்வர் வழங்கியுள்ளார்...' என்று பேசும்போது, ஜெயராமன் கண் கலங்கினார். வார்த்தை தடுமாறியதால், பேச்சை ஒரு நிமிடம் நிறுத்தி கண்களை துடைத்துக் கொண்டு பேச்சை தொடர்ந்தார். அதைப் பார்த்த பொதுமக்களும் கண்கலங்கினர். அங்கிருந்த ஊழியர் ஒருவர், 'கிராமத்து ஓட்டுல 90 சதவீதம் கிடைச்சிருக்குன்னு சொல்லி, மத்த கட்சிக்காரங்களை காட்டிக் கொடுத்துட்டாரே...' என, முணுமுணுத்ததும் அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.