குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு

சாவக்காடு : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு, சென்னை கோடம்பாக்கத்திலிருந்து கடிதம் மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது.
இந்நிலையில், குருவாயூர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு, 27ம் தேதி மர்ம கடிதம் வந்தது. அதில், 'குருவாயூர் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கோவில்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகியோரை கொல்வோம்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
அக்கடிதத்தை, சென்னை கோடம்பாக்கம் தபால் நிலையத்தில் இருந்து, அல் - குவைதா அமைப்பினர் அனுப்பியிருப்பதாக தெரிய வந்துள்ளது. உண்மையில் அக்கடிதத்தை, யார் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து, கோவில்களில் வெடிகுண்டு உள்ளதா என, போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இக்கடிதம் அல் - குவைதா பயங்கரவாதிகள் செயலா அல்லது அவர்களது பெயரில் மர்ம நபர்கள் அனுப்பியதா என, போலீசார் விசாரித்தனர். இக் கடிதத்தின் பிண்ணனியில், தமிழக போலீஸ் ஐ.பி.எஸ். உயரதிகாரி சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோவை 'க்யூ' பிராஞ்ஸ் போலீசார் குருவாயூருக்கு விரைந்தனர். அங்கு கேரளா போலீசாருடன் இணைந்து, விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், திருச்சூரைச் சேர்ந்த பொதுநல ஊழியர் ஜோசப் என்பவர் சாவக்காடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நாளிதழ்களில் வந்த செய்திகளை இணைத்து, மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை மாஜிஸ்திரேட் விசாரித்து, வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியதில், தமிழக போலீஸ் ஐ.பி.எஸ்., உயரதிகாரிக்கும் பங்கு உள்ளதா என்பது குறித்து, வழக்குப் பதிந்து, விசாரணை நடத்த குருவாயூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக, கேரளா போலீசார் சந்தேகிக்கும், தமிழக போலீஸ் உயரதிகாரி யார் என்பது விசாரணையில் தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.