ADDED : ஆக 03, 2011 01:31 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியிலுள்ள கோவில்களில், ஆடி பூரத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவுக்கு, கரியகாளியம்மன் கோவிலிருந்து பக்தர்கள் 25 பால் குடங்கள் கொண்டு வந்தனர். நியூஸ்கீம் ரோடு, காந்திசிலை, கோவை ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு வழியாக கோவிலுக்கு வாத்திய மேளம் முழங்க பால்குடங்கள் சுமந்து வந்தனர். காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு திருவிக்கு பூஜையும், இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதில், கோவில் செயல் அலுவலர் நாகையா உட்பட பலர் பங்கேற்றனர்.பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் காலை 6.00 மணிக்கு 16 வகையான அபிஷேகமும், சிறப்பு பூஜை நடந்தது. பின், மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7.00 மணிக்கு மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், காலை 6.00 மணிக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவமும், பின்னர் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. அம்மன் கோவில்களிலும் நேற்று ஆடிபூரத்தையொட்டி சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.