Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் கடன் நெருக்கடிக்கு தீர்வு: மசோதா நிறைவேறியது: உலக நாடுகள் அறிவுரை

அமெரிக்காவில் கடன் நெருக்கடிக்கு தீர்வு: மசோதா நிறைவேறியது: உலக நாடுகள் அறிவுரை

அமெரிக்காவில் கடன் நெருக்கடிக்கு தீர்வு: மசோதா நிறைவேறியது: உலக நாடுகள் அறிவுரை

அமெரிக்காவில் கடன் நெருக்கடிக்கு தீர்வு: மசோதா நிறைவேறியது: உலக நாடுகள் அறிவுரை

ADDED : ஆக 03, 2011 12:41 AM


Google News
Latest Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க கடன் நெருக்கடி தீர்வுக்கான மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவின் பரிந்துரைகள்படி, அமெரிக்க கடன் உச்சவரம்பு தொகை 14.3 டிரில்லியன் டாலரில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேலும் 2.4 டிரில்லியன் டாலர் அதிகரிக்கப்படும்.



நாட்டின் செலவுகளில், அடுத்து 10 ஆண்டுகளில், 2.1 டிரில்லியன் டாலர் குறைக்கப்படும். இதன் மூலம், நாடு மேலும் கடன் நெருக்கடியில் சிக்காமல் தவிர்க்க வழிவகுக்கப்படும். கடன் நெருக்கடிக்கான தீர்வு கடந்த 31ம் தேதி இரவு எட்டப்பட்டதாக, அதிபர் ஒபாமா அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் இணைந்து தாங்கள் முன்வைத்த பரிந்துரைகளை மசோதாவாக உருவாக்கின. மசோதா நிறைவேற்றம்:இதையடுத்து, பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் ஜனநாயகக் கட்சியினரில் 95 பேர் மசோதாவை ஆதரித்தும், 95 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தனர். எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரில், 174 பேர் ஆதரித்தும், 66 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தனர். மொத்தத்தில், மசோதாவுக்கு ஆதரவாக, 269 ஓட்டுகளும், எதிராக 161 ஓட்டுகளும் விழுந்தன. 'மசோதாவில் சில பரிந்துரைகள் மீதான கருத்து வேறுபாடுகளால், குடியரசுக் கட்சியினர் நிச்சயம் எதிர்ப்பர்; அதனால் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறாது; கடன் நெருக்கடிக்கான தீர்வு அவ்வளவு விரைவில் காணப்படாது' என, பல தகவல்கள் கடந்த 31ம் தேதி முதல் உலவின. ஆனால், பிரதிநிதிகள் சபை அத்தகவல்களை பொய்யாக்கி, மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளது.



செனட் சபையில்... தொடர்ந்து இம்மசோதா, செனட் சபையில் தாக்கல் செய்யப்படும். ஆளுங்கட்சியினர் அதிகமாக உள்ள செனட் சபையில், மசோதாவுக்கு எவ்வித எதிர்ப்பும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இரு சபைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட உடன், சட்டமாக்கும் வகையில் அதிபர் ஒபாமாவின் கையெழுத்திற்காக அனுப்பி வைக்கப்படும். இச்சடங்குகள் அனைத்தும், அமெரிக்க அரசின் நிதியமைச்சகம் விதித்த கெடுவான, இம்மாதம் 2ம் தேதிக்குள் (இந்திய நேரப்படி இன்று அதிகாலைக்குள்)முடிக்கப்பட வேண்டும். எது எப்படியாயினும், 2012 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், 2013 வரை அதிபர் கடன் உச்சவரம்புக்காக காங்கிரசை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 'சாத்தானின் சாண்ட்விச்' இம்மசோதாவின் பெரும்பான்மை அம்சங்கள் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகள் என்பதால், ஆளும் கட்சியினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர். துணை அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மற்றும், 'டீ பார்ட்டி' இயக்கத்தின் மீது நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இதுகுறித்து துணை அதிபர் ஜோ பிடன் கூறுகையில்,'கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் 'டீ பார்ட்டி' கொள்கை உடைய குடியரசுக் கட்சியினர், பயங்கரவாதிகளைப் போல நடந்து கொண்டனர்' என்றார். ஆளும் கட்சி உறுப்பினர் இமானுவேல் க்ளீவர் கூறுகையில், 'இது இனிப்பு தடவிய சாத்தானின் 'சாண்ட்விச்' என்று காட்டமாக தெரிவித்தார்.



சந்தேகத்தில் சீனா: சீனாவில் இருந்து வெளிவரும் சீனா டெய்லி பத்திரிகையில்,'இந்த தீர்வு சீனாவுக்கு நிம்மதியை அளிக்கிறது. ஆனால், இப்பிரச்னையை சீரான முறையில் அமெரிக்கா தீர்க்காவிட்டால், அதன் கடன் மதிப்பீட்டுக் குறியீடு இதே நிலையில் தொடர்வது சந்தேகம் தான். இனி எதிர்காலத்தில், வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வேறு வழிமுறைகளை, சீன எம்.பி.,க்கள் ஆலோசிக்க வேண்டும். இதுபோல, மிகப் பெரிய சவால்கள் இருக்கும் போது, ஒரே இடத்தில் முதலீடுகளைக் குவிப்பதை குறைக்க வேண்டும்' என ஆலோசனை கூறியுள்ளது. இதேபோல், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகைகள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தாலும், அமெரிக்காவின் கடன் மற்றும் டாலர் மீதான மதிப்பு ஆகியவற்றின் மீதான தங்கள் சந்தேகத்தையும் குறிப்பிட்டுள் ளன.



புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்: அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 2.1 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்தப்படும். அரசின் அன்றாடச் செலவுகள், ராணுவ சம்பளம், வாங்கிய கடனுக்கு வட்டி, மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு போன்றவற்றுக்காக, முதற்கட்டமாக, 400 பில்லியன் டாலர் தொகை கடன் உச்சவரம்பில் உயர்த்தப்படும். இரண்டாவதாக, பிப்ரவரிக்குள் மேலும் 500 பில்லியன் டாலர் அதிகரிக்கப்படும். சட்டப்படி, எதிர்க்கட்சியினர் இந்த இரண்டாவது அதிகரிப்பை எதிர்த்து காங்கிரசில் ஓட்டளிப்பர். ஆனால் அதை, அதிபர் தனது மறுப்பாணை (வீட்டோ) மூலம் நிராகரிப்பார். இந்த நடவடிக்கை ஒரு கண்துடைப்புக்காக மேற்கொள் ளப்படும். இதையடுத்து, இந்தாண்டு அக்டோபர் மாதம் அடுத்த 10 ஆண்டுகளுக்கான முதற்கட்ட 917 பில்லியன் டாலர் செலவுக் குறைப்புத் திட்டம் அமலுக்கு வரும். இதில், ராணுவச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் 350 பில்லியன் டாலர் சேமிக்கப்படும்.



இதற்கிடையில், நவம்பரில், இரு கட்சியினரும் அடங்கிய 12 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு, 2013ல் இருந்து மேலும் 1.5 டிரில்லியன் டாலர் செலவுகளைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும். அதேநேரம், அந்தப் பரிந்துரைகளில் வரி உயர்வு இருக்காது. வரி சீர்திருத்தம் இருக்கலாம். டிசம்பர் 23ம்தேதி, பரிந்துரைகள் மீது எவ்வித தாமதமும், திருத்தமும் இன்றி, காங்கிரஸ் ஓட்டளிக்க வேண்டும்.



பரிந்துரைகளை காங்கிரஸ் நிராகரித்தால், 2012, ஜனவரி 15ம் தேதி முதல், முதியோருக்கான நலவாழ்வு காப்பீட்டு திட்டம், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்றவற்றில் தன்னிச்சையாக செலவுகள் குறைக்கப்படும். இறுதியாக, செலவுகள் வருமானத்தை விட அதிகரிக்காமல் இருக்க வழி செய்யும், சீரான பட்ஜெட்டுக்கான அரசியல் சாசன திருத்தம், காங்கிரசில் ஓட்டளிப்பு மூலம், இந்தாண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதிபர் ஒபாமா, மேலும் 1.5 டிரில்லியன் டாலர் கடன் உச்சவரம்பை அதிகரிக்க, காங்கிரசிடம் கோருவார். நிறைவேற்றப்படாத பட்சத்தில், உச்சவரம்பை 1.2 டிரில்லியன் டாலராக குறைத்துக் கேட்பார்.



'பென்டகனுக்கு' பாதிப்பு: தற்போதைய ஒப்பந்தத்தால், அமெரிக்க ராணுவ மையமான 'பென்டகன்' பெரிதும் பாதிக்கப்படும். அடுத்த பத்தாண்டுகளில் அதற்கான நிதி ஒதுக்கீட்டில், 550 பில்லியன் டாலர் குறைக்கப்படும். இந்தாண்டில் மட்டும் 'பென்டகனுக்கு' 689 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2012ல் 684 பில்லியன் டாலராக குறைக்கப்படும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us