/உள்ளூர் செய்திகள்/சென்னை/வளர்ச்சிக்கு பயன்படும் வெடிபொருட்கள்: மத்திய அரசு அனுமதியின்றி பெரும் திணறல்வளர்ச்சிக்கு பயன்படும் வெடிபொருட்கள்: மத்திய அரசு அனுமதியின்றி பெரும் திணறல்
வளர்ச்சிக்கு பயன்படும் வெடிபொருட்கள்: மத்திய அரசு அனுமதியின்றி பெரும் திணறல்
வளர்ச்சிக்கு பயன்படும் வெடிபொருட்கள்: மத்திய அரசு அனுமதியின்றி பெரும் திணறல்
வளர்ச்சிக்கு பயன்படும் வெடிபொருட்கள்: மத்திய அரசு அனுமதியின்றி பெரும் திணறல்
ADDED : ஜூலை 29, 2011 11:24 PM
சென்னை:'நைட்ரோ கிளிசரின்' ரக வெடிபொருட்களை தடை செய்துள்ளதால், வருவாய் ஈட்டுவதில், தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் திணறுகிறது.
இவ்வகை வெடிமருந்துக்கு தடையை நீக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், மாநில அரசால் நடத்தப்படும், ஒரே வெடி மருந்து நிறுவனமாக, தமிழ்நாடு தொழில் வெடி மருந்து (டெல்) நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனம், 1986ல், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகில், வண்டாரந்தாங்கல் கிராமத்தில், 750 ஏக்கர் வனத்துறை நிலத்தில் துவக்கப்பட்டது.சாலை மேம்பாட்டுப் பணிகள், கால்வாய் வெட்டுதல், கிணறு தோண்டுதல், கல் குவாரி, சுரங்கத் தொழிலுக்கு பயன்படும் வெடிமருந்துகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.வெடி மருந்து விற்பனை குறித்த தகவல்களை, நாள்தோறும், 'பெசோ' என்ற அமைப்பிற்கு, இணையதளம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம், வெடிமருந்து விற்பனை கட்டுப்படுத்தி, கண்காணிக்கப்படுகிறது.தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவனம், துவக்கத்தில், 'நைட்ரோ கிளிசரின்' வகை வெடி மருந்துகளை உற்பத்தி செய்தது. பின், கலவை வெடி மருந்துகள், வெடியூக்கி, வெடித்திரி உற்பத்தியில், களம் இறங்கியது.'நைட்ரோ கிளிசரின்' வெடி மருந்துகள், ஓராண்டு வரை சேமித்து வைத்து, சுரங்கம், கல்குவாரி போன்ற அனைத்து தொழில்களுக்கும் பயன்படுத்தக் கூடியது.
சிமென்ட் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சுரங்கத் தொழில், சுண்ணாம்பு கல்குவாரி போன்ற, திறந்த வெளி சுரங்கங்களுக்கு, கலவை வெடி மருந்து பயன்படுத்தப்படுகிறது.ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, 2003ல், திருப்பதி பயணம் செய்த போது, நக்சல்கள் வெடி பொருள் பயன்படுத்தி தாக்கினர். இதற்கு, 'நைட்ரோ கிளிசரின்' வகை வெடி மருந்து பயன்படுத்தியது, கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு, 2004 முதல், நைட்ரோ கிளிசரின் வகை வெடி மருந்து உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்தது.அப்போது, நாடு முழுவதும், 'நைட்ரோ கிளிசரின்' வகை வெடி மருந்து தயாரிப்பில், 'டெல்' சேர்த்து, 4 நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. 'டெல்' நிறுவனத்தின், மொத்த விற்பனையில், 75 சதவீத வருவாய் நைட்ரோ கிளிசரின் வகை வெடி மரு ந்து மூலம் கிடைத்து வந்தது.
மத்திய அரசின் தடையை அடுத்து, நிறுவனத்தின் வெடி மருந்து விற்பனை சரியத் துவங்கியது. ஆகவே, இதை மீண்டும் தயாரிக்க மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டிருக்கிறது.'நைட்ரோ கிளிசரினுக்கு' மாற்றாக, 'எமல்ஷன்' வகை வெடி மருந்துகள் தயாரிக்கப்பட்டன. இவ்வகை வெடிமருந்து தயாரிப்பில், தற்போது நாடு முழுவதும், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால், வெடி மருந்து தொழிலில் கடும் போட்டி நிலவுகிறது.இந்தியாவில், 40க்கும் மேற்பட்ட வெடி மருந்து நிறுவனங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில், அரசு நிறுவனத்தை தவிர்த்து, சேலத்தில், வெற்றிவேல் வெடி மருந்து நிறுவனம், ஓசூரில், சுஹா மற்றும் ஈரோட்டில், ராஜா வெடி தொழில் வெடி மருந்து நிறுவனங்கள் உள்ளன.மத்திய அரசின், 'பெசோ' நிறுவனம் (பெட்ரோலியம் எக்ஸ்புளோசிவ் சேப்டி கூட்டமைப்பு), தலைமை வெடி மருந்து கட்டுப்பாட்டு அலுவலரின் கீழ் இயங்குகிறது. இதன் தலைமை அலுவலகம், நாக்பூரிலும், தென் மண்டல அலுவலகம், சென்னையிலும் அமைந்துள்ளன. இங்கு, லைசென்ஸ் பெற்றவர் மட்டுமே வெடி மருந்து வாங்க, விற்க அனுமதிக்கப்படுவர்.இதற்கான லைசென்ஸ் நடைமுறைகள் பற்றி கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற மத்திய உள்துறை, சில நடைமுறைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆக்க சக்திக்கு பயன்படுத்த தேவை என்ற முறையில் லைசென்ஸ் பெற்ற விற்பனையாளர்களுக்கு, செல்லும் வெடிபொருள், சில நேரங்களில், தவறான கைகளுக்கு செல்லுகிறது.நமது நாடு பெரிய நாடு, இதில் வாகனப் போக்குவரத்து முழுவதும் அடுக்கடுக்கான பாதுகாப்பு வளையத்திற்குள் வருவதில்லை.
அப்படி முறைதவறி தவறான கைகளுக்கு சென்று, அதனால் இழப்புகள் ஏற்படும் போது, வெடிமருந்து பற்றி அதிகம் பேசப்படுகிறது.ஆனால், நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு, அதிகம் பயன்படும் இந்த வெடிமருந்து தயாரிப்பு பற்றி, போதிய விழிப்புணர்வு இன்னமும் சமூகத்தில் ஏற்படவில்லை. ரூ.39 கோடிக்கு விற்பனைதமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவனம், 2001ல், 52 கோடி ரூபாய்க்கு வெடி மருந்துகளை விற்பனை செய்துள்ளது. 2002ல், 41 கோடி, 2003ல், 44 கோடி, 2004ல், 42 கோடி, 2005ல், 30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.கடந்த, 2006ல், 27 கோடி, 2007ல், 23 கோடி, 2008ல், 19 கோடி, 2009ல், 41 கோடி, 2010ல், 39 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனை குறித்த விவரம், நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்திற்கு பின்னரே தெரிவிக்கப்படும் என தெரிகிறது.'டெல்' வாடிக்கையாளர்கள்ஓ.என்.ஜி.சி., - இந்துஸ்தான் காப்பர் - என்.எல்.சி., - கோல் இந்தியா, விசாகப்பட்டினம் இரும்பு ஆலை, ராஜஸ்தான் கனிம நிறுவனம், தமிழ்நாடு சிமென்ட் கழகம், மலபார் சிமென்ட், சிங்கரேனி நிலக்கரிச் சுரங்கம் போன்றவை, தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவனத்தின் பிரதான வாடிக்கை நிறுவனங்கள்.
வீ.அரிகரசுதன்