பிரதமர் மீது புகார் கூறவில்லை என்கிறார் ராஜா
பிரதமர் மீது புகார் கூறவில்லை என்கிறார் ராஜா
பிரதமர் மீது புகார் கூறவில்லை என்கிறார் ராஜா

அவரது வழக்கறிஞர் சுஷீல்குமார் வாதாடும்போது, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் ஆகிய இருவருக்கும் யுனிடெக், ஸ்வான் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்த விஷயம் தெரியும் என்றும், இதை பிரதமரால் மறுக்க முடியுமா என்றும் சவால் விடுத்திருந்தார். இது, பெரும் பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், நேற்றும் ராஜா தொடர்ந்து வாதாடினார்.
அவரது வழக்கறிஞர் கூறியதாவது:அமைச்சர்கள் குழுவை போட்டிருக்க வேண்டுமென அப்போதைய சட்ட அமைச்சர் பரத்வாஜ் கூறி, அதையும் மீறியதாக என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து தாங்களே முடிவு செய்யலாம்; அமைச்சர்கள் குழு தேவையில்லை என தொலைத்தொடர்புத் துறை தான் முடிவெடுத்தது. இது பிரதமருக்கு தெரியும்.இருப்பினும் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நான்கு வாய்ப்புகள் தரப்பட்டன. இம்முடிவுகள் தவறு என தெரிந்திருந்தால், பிரதமர் தலையிட்டு இருக்கலாமே.
அமைச்சர்கள் குழுவை போடுவதற்கு நான் தடையாக இல்லையே. பிரதமர் என்பவர் எனக்கு தலைவர். என்னைக் காட்டிலும் அதிகாரம் மிக்கவர். அவர் ஏன் தலையிடவில்லை?
ஆனால், நான் போர்ஜரி செய்ததாக அவர் அபாண்டமாகக் கூறுகிறார். அவரை இவ்வழக்கில் சாட்சியாக்கி விசாரிக்க வேண்டும்.நான் சதி செய்ததாகக் கூறுகின்றனர். 2007 பிப்ரவரியிலேயே ஸ்பெக்ட்ரம் கேட்டு, ஸ்வான் விண்ணப்பிக்கிறது. நான் அதற்கு பிறகு தான் அமைச்சராகிறேன். நான் தொலைத்தொடர்பு அமைச்சராவேன் என அதுவரைக்கும் கனவில் கூட நினைக்கவில்லை. யுனிடெக் நிறுவனத்திற்கு 24.9.2007ல் ஸ்பெக்ட்ரம் வழங்கினேன். அடுத்த நாளே சாம் நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்தேன். அப்படியானால், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சலுகை காட்டினேன் என, எப்படி கூற முடியும்.
சட்டப்பூர்வமான அறிவுடன் அறிக்கை தயார் செய்யப்படவில்லை. ஏலம் நடத்தியிருந்தால், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்காது. 'ஏலம் நடத்தியிருந்தால்...' என்று தான் அந்த அறிக்கை கூறுகிறது; ஏலம் நடத்தும்படி சட்டம் கூறவில்லையே. ஏற்கனவே இருக்கும் சட்டத்தை அமல்படுத்துவது மட்டும் தானே என்னால் முடியும்.நான் பிரதமரையும், சிதம்பரத்தையும் இவ்வழக்கில் இழுத்துவிட்டதாக மீடியாக்கள் எழுதுகின்றன. என் தரப்பு நியாயங்களைத் தான் வைக்கிறேனே தவிர, யாரையும் குற்றம் சாட்டவில்லை.
நான் கூறாத விஷயங்களை எல்லாம் மீடியாக்கள் இஷ்டத்திற்கு எழுதுவதை தடுக்க வேண்டும். இல்லையெனில், கோர்ட்டுக்குள் மீடியாக்களை அனுமதிக்க மறுக்க வேண்டும்.
அதேபோல ஸ்வான்,யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் எடிஸ்லாட்டுக்கும் டெலிநாருக்கும் பங்கு விற்பனை செய்த விபரங்கள் முழுக்க, அப்போதைய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்துக்கு தெரியும். எனவே அவரை சிபிஐ இவ்வழக்கில் சாட்சியாக ஆக்க வேண்டும்.நான் முன்னாள் அரசு ஊழியன் என்ற அடிப்படையில்தான் இந்த வழக்கை சிபிஐ நடத்துகிறது. அப்படியானால் என்மீது வழக்கு தொடருவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி வாங்கிட வேண்டும். அதையும் கூட செய்யவில்லை. என்மீது பொய்யான குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது.இவ்வாறு ராஜாவின் வழக்கறிஞர் வாதாடினார்.
சட்டையை மாற்றிய வழக்கறிஞர்:நீதிபதி சைனி கோர்ட்டில் நேற்றும் ஏ.சி., பழுதடைந்துவிட்டதால் ராஜாவின் வழக்கறிஞர் சுஷீல் குமார் வியர்வையில் குளித்தபடியே வாதங்களை அடுக்கினார். உணவுஇடைவேளைக்கு முன்பாக அவர் தனது சட்டையையே மாற்றிவிட்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தளவுக்கு கோர்ட் அறையில் புழுக்கம் காணப்பட்டது. வழக்கம்போல கூட்டம் அதிகமாக இருந்தாலும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட சில எம்.பி.,க்கள் கோர்ட்டிற்கு வந்திருந்தனர்.