/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கண்துடைப்புக்கு நடந்தது கிராமசபை கூட்டம்கண்துடைப்புக்கு நடந்தது கிராமசபை கூட்டம்
கண்துடைப்புக்கு நடந்தது கிராமசபை கூட்டம்
கண்துடைப்புக்கு நடந்தது கிராமசபை கூட்டம்
கண்துடைப்புக்கு நடந்தது கிராமசபை கூட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்தில் நேற்றுமுன்தினம் நடந்த கிராம சபை கூட்டங்களில் மக்கள் பங்களிப்பு அதிகளவு இல்லாமல் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது.சட்டசபை தேர்தல் அறிவிப்பு அமலில் இருந்ததால், கடந்த மே 1ம் தேதி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை.
பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் பங்களிப்பே இல்லை. தலைவர், ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். கிராமத்திலுள்ள தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் மற்றும் கிராமத்திலுள்ள கடைகளில் கையெழுத்து பெற்று கிராமசபை கூட்டம் நடந்ததாக பதிவு செய்தனர்.கிராம சபை நடப்பது குறித்து கிராமத்தில் எவ்வித தண்டோரா அறிவிப்பும் செய்யப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுள்ள ஒருசில ஊராட்சிகளில் மட்டும் வாக்குவாதமும், சலசலப்பும்ஏற்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 262 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராமசபையில் 2,300 ஆண்களும், 2,755 பெண்களும் கலந்து கொண்டனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தி, மொத்தம் 196 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 2,181 ஆண்களும், 2,563 பெண்களும் கலந்து கொண்டனர்.ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், தாத்தூர் ஊராட்சியில் மக்கள் பங்களிப்பு (கோரம்) அதிகம் இல்லாததால் கிராமசபை ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
மீதமுள்ள 18 ஊராட்சிகளில் கிராம சபை நடத்தி, 119 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபையில் 1,456 ஆண்களும், 1,638 பெண்களும் கலந்து கொண்டனர்.தாத்தூரில் ஆட்சேபனை: ஆனைமலை ஒன்றியம் தாத்தூர் ஊராட்சியில் கிராம சபையில் பொதுமக்கள் பேசுகையில், 'ஊராட்சி தெருவிளக்கு 'பல்பு' வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. கிராமத்தில் சுகாதாரம் செய்த வகையில் ஏற்பட்ட செலவு கணக்குகளில் சந்தேகம் உள்ளது. ஊராட்சி அனுமதி, ஒன்றிய அனுமதி, குடிநீர் வடிகால் வாரிய அனுமதியின்றி தனியார் பால் கம்பெனிக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் இருவரும் சேர்ந்து முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். தனியார் பால் கம்பெனிக்காக ரோட்டில் குழி தோண்டி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இதனால் தாத்தூர் கிராமசபையில் பரபரப்பு ஏற்பட்டு, கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.