சன் "டிவி' மீது இந்து அமைப்புகள் புகார்
சன் "டிவி' மீது இந்து அமைப்புகள் புகார்
சன் "டிவி' மீது இந்து அமைப்புகள் புகார்
சென்னை : இந்து மதத்திற்கு எதிராகச் செயல்படும் சன்,'டிவி', தினகரன் நாளிதழ், திராவிடர் கட்சியினர், இந்து மக்கள் கட்சி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து தர்ம சக்தி அமைப்பைச் சேர்ந்த பெண்கள், போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து மனு அளித்தனர்.
இதேபோல், இந்து தேசிய காங்கிரசின் தலைவர் மதுசூதனன் பெருமாள் தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், நிஜம் நிகழ்ச்சியின் மூலம், இந்து மத வழிபாடுகளை மூடநம்பிக்கைகள் எனக் கூறி, இந்துக்கள் மனம் புண்படும் படியாக நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். எனவே, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து, சன்,'டிவி' மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், நித்யானந்தாவை போலி சாமியார் எனக் கூறியுள்ள திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்ரீராம் சேனா தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் பலராமன், கமிஷனரிடம் அளித்த மனுவில், 'மேக்னடிக் பெட்' வழக்கில் தேடப்பட்டு வரும் லெனின் கருப்பனை கைது செய்யாத நிலையில், அவர் கடந்தாண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து சென்றுள்ளார். அவரை கைது செய்வதை தவிர்த்து, பொய் புகாரை பெற்று, விளம்பரம் பெற உதவியுள்ளனர். பொய் புகாரை வழங்கி, இந்து மத உணர்வுகள் புண்படும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார். எனவே, இவரை கைது செய்து தண்டிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். புகார்களை பெற்றுக் கொண்ட கமிஷனர் திரிபாதி, விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார்.