ஜவுளிக்கு வாட் வரி முற்றிலும் ரத்து : ஜெ., அதிரடி
ஜவுளிக்கு வாட் வரி முற்றிலும் ரத்து : ஜெ., அதிரடி
ஜவுளிக்கு வாட் வரி முற்றிலும் ரத்து : ஜெ., அதிரடி
ADDED : ஜூலை 21, 2011 08:27 PM
சென்னை: ஜவுளித் தொழில் துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஐந்து சதவீத மதிப்புக் கூட்டு வரி, முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: முந்தைய தி.மு.க., அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான கடன் சுமையை சுமத்திவிட்டுச் சென்ற நிலையில், ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களை பாதிக்காத வகையில், மதிப்புக் கூட்டு வரி சிறிதளவு உயர்த்தப்பட்டது. 'ஜவுளி ஏற்றுமதியில் நிலவும் மந்தமான நிலையால், துணிகள் மற்றும் இழைகள் அதிகளவில் தேக்கமடைந்துள்ளன. இத்தருணத்தில் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், மற்ற மாநில உற்பத்தியாளர்களுடன் போட்டியிட இயலாது' என, ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்தன. தற்போது, ஜவுளித்துறை சந்தித்து வரும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, இதுபற்றி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 'துணி மற்றும் துணிப் பொருட்கள் மீதான ஐந்து சதவீதம் மதிப்புக் கூட்டு வரியை கடந்த 12ம் தேதி முதல், முன் தேதியிட்டு திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்' என, முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவால், துணி மற்றும் துணிப் பொருட்கள், வரி விதிப்பிலிருந்து விலக்குப் பெற்ற இனங்களாக விளங்கும். இதன் மூலம், தமிழகத்தின் ஜவுளித் தொழிலுக்கு நிவாரணம் கிடைப்பதுடன், இந்தத் தொழில் பெருகவும் வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.