Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மர்ம நபர்களால் கிராம மக்கள் பீதி: போலீஸார் ரோந்து பணி மேற்கொள்ள கோரிக்கை

மர்ம நபர்களால் கிராம மக்கள் பீதி: போலீஸார் ரோந்து பணி மேற்கொள்ள கோரிக்கை

மர்ம நபர்களால் கிராம மக்கள் பீதி: போலீஸார் ரோந்து பணி மேற்கொள்ள கோரிக்கை

மர்ம நபர்களால் கிராம மக்கள் பீதி: போலீஸார் ரோந்து பணி மேற்கொள்ள கோரிக்கை

ADDED : ஜூலை 21, 2011 02:17 AM


Google News

மோகனூர் : 'மோகனூர் பகுதி கிராமப்புறங்களில், மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பீதியில் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களின் பயத்தை போக்கும் வகையில், இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மோகனூர் யூனியன், பேட்டப்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணியங்காளிப்பட்டி காலனி, முத்தமிழ் நகர், புதுக்காலனி உள்ளது. அங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 1,000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அவர்களில், பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். இங்கு, சாலை, சாக்கடை, மின்வசதி என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்பகுதியாக இருப்பதால், இரவு நேரத்தில் 9 மணிக்கு மேல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து விடுவர். ஏதாவது சத்தம் கேட்டால் மட்டுமே வெளியே வந்து பார்த்துச் செல்வர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு 11 மணிக்கு மேல் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மணயங்காளிப்பட்டி முத்தமிழ் நகர், புதுக்காலனியில் உலா வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சட்டை அணிந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது, கறுப்பு சட்டை அணிந்த மூன்று மர்ம நபர்கள் அப்பகுதியில் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, அந்த மர்ம நபர்கள் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்றிருந்துள்ளனர். அந்தப்பெண் சற்று தூரம் நடந்து சென்றுவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். ஒரு சிலர் அப்பகுதியில் தேடி பார்த்துள்ளனர். ஆனால், மர்ம நபர்களை காணவில்லை. இச்செய்தி, காலையில் காட்டுத்தீபோல் அப்பகுதி மக்களிடையே பரவியதை அடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. அவர்களை பிடிக்க, போலீஸாரும் கண்கொத்திப்பாம்பாக தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், திருடர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இந்நிலையில், கிராம பகுதியில், தொடர்ந்து இரவு நேரத்தில் மர்ம நபர்கள் உலா வருவதால், மக்கள் பயத்தில் வீட்டுக்குள் முடிங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, 'மக்களின் பயத்தை போக்கும் வகையில், மர்ம நபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், போலீஸார் இரவு நேரத்தில் மணியங்காளிப்பட்டியில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us