ADDED : ஜூலை 17, 2011 01:19 AM
திருப்பூர் : திருப்பூர் புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனை முன், நிழற்குடை இல்லாததால் தகிக்கும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் தவிக்கின்றனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம் அமைக்கும் பணி நடந்து வருவதால், பல்லடம் வழியாக கோவை, உடுமலை, பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் ஏ.பி.டி., ரோடு வழியாக திருப்பி விடப்படுகின்றன. பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருந்த பஸ் ஸ்டாப், தற்காலிகமாக புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனை முன் மாற்றப்பட்டுள்ளது. கொடுவாய், காங்கயம், பெருந்தொழுவு, சம்பந்தம்பாளையம், அலகுமலை, பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நகர பஸ்கள் இங்கிருந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன; தினமும் ஏராளமானோர் இந்த ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மருத்துவமனை அருகில் இருப்பதால் எந்நேரமும் கூட்டம் நிறைந்து வழிகிறது. கடந்த இரண்டு வாரமாக வெயில் சுட்டெரிப்பதால் மாணவ மாணவியர், அலுவலகம் செல்வோர், சிகிச்சை பெற வரும் நோயாளிகள், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெயிலில் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் புறநோயாளிகள் பிரிவு பஸ் ஸ்டாப் முன், தற்காலிக நிழற்குடை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.