ADDED : ஜூலை 17, 2011 01:17 AM
திருப்பூர் : 'மூடியுள்ள சாய ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுத்திகரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் பாதுகாப்பு மகளிர் இயக்கம் தொடர் உண்ணாவிரதபோராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. திருப்பூரில் கடந்த ஆறு மாதங்களாக சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில் நுட்பத்தை ஏற்பதாக சாய ஆலை உரிமையாளர்கள் கடிதம் கொடுத்தும் கூட, சாய ஆலைகளை திறப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதனால், பனியன் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆலோசிப்பதற்காக திருப்பூர் தொழில் பாதுகாப்பு மகளிர் இயக்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜாத்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மூடப்பட்டுள்ள சாய ஆலைகளை விரைவில் திறக்கவேண்டும். சுத்திகரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோரிக்கைகளையும் தொழில் பாதிப்புகளையும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தொடர் உண்ணாவிரதபோராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்பட்டுள்ளது. காவல்துறை அனுமதிபெற்று, ஓரிரு நாட்களில் உண்ணாவிரதத்தை துவக்குவது' என, முடிவுசெய்யப்பட்டது.