முத்தம்பாளையத்தில் சுவரில்லாத பாலம்
முத்தம்பாளையத்தில் சுவரில்லாத பாலம்
முத்தம்பாளையத்தில் சுவரில்லாத பாலம்
ADDED : ஜூலை 15, 2011 12:40 AM
ஈரோடு: முத்தம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில், கைப்பிடிச்சுவரில்லாத தரைப்பாலம் வழியே பயணிக்கும் வாகனங்கள் ஆபத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
காசிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மலைக்கோவில் பின்பகுதியில் தரைப்பாலம் உள்ளது. பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் எந்த பாதுகாப்புமின்றி உள்ளது. பாலத்தின் இருபுறமும் இருந்த கைப்பிடி சுவர் மாயமாகி விட்டது. பாரதிபுரம், கல்யாணசுந்தரம் வீதி, மலைக்கோயில், கே.கே.,நகர், சுப்பிரமணியபுரம், வாய்க்கால்மேடு, சாஸ்திரி நகர், விவேகானந்தா நகர், காசிபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், இந்தப்பாலம் வழியேதான் நாள்தோறும் பயணிக்கின்றனர். அருகிலுள்ள யூனியன் துவக்கப்பள்ளியை சேர்ந்த குழந்தைகளும் இப்பாலத்தை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். பாலத்தின் இரு புறமும் கைப்பிடி சுவர் இல்லாததால், பள்ளி குழந்தைகள் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டியுள்ளது. மழைக்காலத்தில் இப்பாலத்தின் மேல் தண்ணீர் வழிந்தோடும். அப்போது, பள்ளிக் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாவர். பாலத்தின் மட்டத்தை உயர்த்தி, கைப்பிடி சுவர் அமைக்க வேண்டும்.