தகவல் தொழில் வளர்ச்சியின் போது உருவான கட்டடங்கள் :கோடிக்கணக்கில் வாடகை இழப்பால் தவிப்பு
தகவல் தொழில் வளர்ச்சியின் போது உருவான கட்டடங்கள் :கோடிக்கணக்கில் வாடகை இழப்பால் தவிப்பு
தகவல் தொழில் வளர்ச்சியின் போது உருவான கட்டடங்கள் :கோடிக்கணக்கில் வாடகை இழப்பால் தவிப்பு
தகவல் தொழில்நுட்பத் துறையில், 2008ம் ஆண்டு ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐ.டி., நிறுவனங்களுக்காக கட்டப்பட்ட கட்டடங்களில், எட்டு லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்புள்ள வளாகங்கள், கடந்த சில ஆண்டுகளாக காலியாக உள்ளன.
கூடுதல் எப்.எஸ்.ஐ., சலுகை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய சி.எம்.டி.ஏ., எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஐ.டி., பூங்காக்கள், ஐ.டி., நிறுவனங்களுக்கான அலுவலக வளாகங்கள் அமைக்க, நிலம் ஒதுக்குவது, கட்டடம் கட்டுவது ஆகியவற்றில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு 2003ம் ஆண்டு அறிவித்தது. விவசாய நிலம், நகர்சாராத உபயோகப் பகுதி, சிறப்பு மற்றும் அபாயகரமான தொழிற்சாலைப் பகுதி மற்றும் திறந்தவெளி உபயோகப்பகுதி ஆகியவற்றைத் தவிர்த்து, ஏனைய நில உபயோகப் பகுதிகள் அனைத்திலும் ஐ.டி., மற்றும் அது சார்ந்த கட்டடங்கள் கட்ட சென்னை பெருநகர் பகுதி முழுவதும் அனுமதிக்கப்பட்டன.
வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளில் வழக்கமாக அனுமதிக்கத்தக்க, தளப்பரப்புக் குறியீடான (எப்.எஸ்.ஐ.,) 1.5ஐ விட, கூடுதலாக 1.5 மடங்கு அதாவது, 0.75 தளப்பரப்புக் குறியீடு அளவுக்கு கட்டடங்கள் கட்டலாம். இது தவிர, வாகன நிறுத்துமிடம், தானமாக அளிக்கப்பட்ட திறந்தவெளி நிலங்களை அந்தந்த நிறுவனங்களே பராமரிக்கலாம் என்பது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.
கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம்: ஐ.டி., துறை வளர்ச்சி, அதற்கு அரசு அறிவித்த சலுகைகள் காரணமாக பல்வேறு பெரிய கட்டுமான நிறுவனங்களும் ஐ.டி., பூங்காக்கள் மற்றும் அலுவலக வளாகங்களை கட்ட முன்வந்தன.அமெரிக்கா உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து இந்திய நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்து வந்ததால், ஐ.டி., நிறுவனங்களுக்கான கட்டடங்கள் கட்டினால், வாடகை மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்ற ஆர்வத்தில், பல்வேறு நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தின. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சிறப்பு சலுகை அடிப்படையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 10 ஆயிரம் சதுர அடியில் இருந்து 2.5 லட்சம் சதுர அடி வரை பரப்பளவு கொண்ட அனைத்து வசதிகளும் கொண்ட அடுக்குமாடி ஐ.டி., பூங்காக்களின் எண்ணிக்கை, கிடுகிடுவென அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஐ.டி., அல்லாத பிற நிறுவனங்களின் அலுவலக தேவைகளுக்கு இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.
ஐ.டி., பின்னடைவு: ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு கிடைத்து வந்த ஆர்டர்கள் தடைபட்டன. இந்த பாதிப்பு இங்குள்ள ஐ.டி., நிறுவனங்களை மட்டுமல்லாது, அதன் சார்பு நிறுவனங்களிடமும் எதிரொலித்தது. இதனால், இதற்கு கிடைத்து வந்த முதலீடுகளும் குறையத் தொடங்கின. புதிய நிறுவனங்கள் வருகை வெகுவாக குறையத் தொடங்கியது. சிறிய அளவிலான பல ஐ.டி., நிறுவனங்களும் மூடுவிழா கண்டன. இவர்களுக்காக கட்டப்பட்ட கட்டடங்களும் பயனற்றுப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டன. எஸ்.டி.பி.ஐ., அமைப்பில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு மட்டுமே, ஐ.டி., வளாகங்களில் இடம் வாடகைக்கு அளிக்க வேண்டும். இதற்காக கட்டப்பட்ட கட்டட வளாகங்களை, பிற நிறுவனங்களின் தேவைக்கு பயன்படுத்தக் கூடாது என, அரசு விதித்த சில நிபந்தனைகள் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.
மாதம் 4.8 கோடி ரூபாய் இழப்பு: இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஐ.டி., நிறுவன நிர்வாகி ஒருவர் கூறும் போது, 'சென்னையின் பிரதான வணிகப் பகுதிகளான அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சாந்தோம், தி.நகர், கிண்டி பகுதிகளிலும், தரமணி உள்ளிட்ட பழைய மாமல்லபுரம் சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட ஐ.டி., வளாகங்கள் எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் காலியாக கிடக்கின்றன. ஐந்து லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவுக்கு காலியாக உள்ளன. சதுர அடிக்கு சராசரியான வாடகை 60 ரூபாய் என கணக்கிட்டாலும், மாதத்துக்கு இதனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மட்டும் 4.8 கோடி ரூபாயை தாண்டும்' என்றார்.
'கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பின்னடைவு, தற்போது மெல்ல சீரடைந்து வந்தாலும், இத்துறையில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில், தேவைக்கு அதிகமாக கட்டடங்கள் கட்டப்பட்டதே இந்த நிலைக்கு காரணம். பலரும் தங்கள் பணத்தை முதலீடு செய்யாமல் வங்கிக்கடன் மூலமாகவே, இந்த வளாகங்களை கட்டியுள்ளனர். கடன் வசூலாகாததால், இந்த வளாகங்களை சுவாதீனம் செய்து ஏலம் விட்டு, தங்கள் பணத்தை மீட்கவும் முடியாத நிலையில், என்ன செய்வது என்று புரியாமல் வங்கிகள் குழப்பத்தில் உள்ளன' என, கிண்டியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஐ.டி., வளாக உரிமையாளர் ஒருவர் கூறினார்.
தீர்வு என்ன?
ஆனால், இவ்வாறு கூடுதல் பணம் செலுத்தி ஐ.டி., வளாகங்களை நிலை மாற்ற, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், ஐ.டி. நிறுவனங்களுக்கு பயன்படும் கட்டட அமைப்பு மற்ற வசதிகள் வேறு தொழில்களுக்கு தினசரி நடவடிக்கைக்கு ஏற்றதாக அமையாது. இதனால், கூடுதலாக உள்ள பெரிய அறைகள் மற்ற வசதிகள் எதற்கு என்று, மற்ற துறையினர் கருதுவதும், அதைப் பராமரிக்க செலவாகும் என்பதும், ஆர்வம் அதிகரிக்காததற்கு காரணம். இது குறித்து தொழில்நுட்பத் துறையினர் புதிய அணுகுமுறை ஏற்படுத்தினால் மட்டுமே விடிவு காண முடியும்.
எத்தனை கட்டடங்களுக்கு அனுமதி?
அரசின் சலுகை அறிவிப்பை அடுத்து, சி.எம்.டி.ஏ., மூலம் இதுவரை அனுமதி வழங்கப்பட்ட அடுக்குமாடி ஐ.டி., வளாகங்கள் விவரம்:
எவ்வளவு இடம் காலி?
சென்னையில், பகுதி வாரியாக காலியாக உள்ள, ஐ.டி., வளாகங்கள் விவரம் (பெரிய திட்டங்கள் மட்டும்):
பகுதி- வளாகங்கள் எண்ணிக்கை- பரப்பளவு (சதுர அடியில்)
வி.கிருஷ்ணமூர்த்தி