Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர் : சாத்தான்குளம் பகுதியில் கரும்புகள் காய்கிறது

கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர் : சாத்தான்குளம் பகுதியில் கரும்புகள் காய்கிறது

கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர் : சாத்தான்குளம் பகுதியில் கரும்புகள் காய்கிறது

கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர் : சாத்தான்குளம் பகுதியில் கரும்புகள் காய்கிறது

ADDED : ஜூலை 12, 2011 12:24 AM


Google News

சாத்தான்குளம் : தனியார் கம்பெனிகளின் தவறுதலான வழிகாட்டுதலால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர் வடிகின்றனர்.

கரும்பு பயிரிட ஏற்ற நீர்வளம், நிலவளம் இல்லாததால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. எனவே சர்க்கரை ஆலையினர் கரும்பு வெட்டுவதற்கு முன்வர மறுக்கின்றனர் என விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

விவசாயத்தில் நன்செய் பயிராகக் கருதப்படுபவை நெல், வாழை, கரும்பு இவற்றிற்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படும். இதில் நெல் மூன்று மாதத்திலும், வாழை 10 மாதத்திலும், கரும்பு ஒரு வருடத்திலும் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த பயிர்கள் நல்ல நீர்வளமும், உவர்ப்பு தன்மையற்ற தண்ணீரிலும் அதிக மகசூல் தரும். சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் முழுவதும் கிணற்றுப் பாசானத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதில் பல கிணறுகளில் தண்ணீர் துவர்ப்பு மற்றும் உப்புத் தன்மை உடையவை. இவைகள் மழைக்காலங்களில் சிறிது மாற்றமடையும். அந்த நேரத்தில் நெல் பயிரிடுவர். மற்ற காலங்களில் புன்செய் பயிர்களான கடலை, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படும். தற்போது வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு உள்ளதால் புன்செய் பயிர் செய்வது வெகுவாக குறைந்து வருகிறது. நெல் பயிர் மெஷின் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. அதன் பிறகு வயல்வெளிகள் தரிசாக விடப்படுகிறது. இந்த விவசாயிகளை தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டு கரும்பு சாகுபடி செய்யும் படியும், அதற்கு விதை, உரம் மற்றும் கரும்பு வெட்டுதல் முதலிய அனைத்தும் ஆலை நிர்வாகம் சார்பில் கடனாக வழங்கப்படும் என கூறினர். கரும்பு அறுவடை செய்யும்பொழுது கரும்பின் சர்க்கரை அளவை கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு செலவழித்த பணம் போக மீதிப் பணத்தை வழங்கி வந்தனர். இதில் முதல் போகம் கரும்பு அறுவடை செய்தபின் இரண்டாம் அடி வெட்டாமல் வளர்ந்து அறுவடை காலம் கடந்தும் கரும்பை வெட்டுவதற்கு உரிய வேலை ஆட்களை ஆலை நிர்வாகம் அனுப்பாததால் பல இடங்களில் 15 மாதம் ஆகியும் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட கரும்பு வெட்டப்படாமல் உள்ளது. தற்போது கோடை வெப்பம் அதிகமாக உள்ளது. போதுமான தண்ணீர் இல்லாமல் கரும்பு வாடி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி கரும்பு பயிரிட்டுள்ள சாத்தான்குளம் பிரபு, ஸ்ரீகிருஷ்ணவேணி, சண்முகசுந்தரம் மற்றும் விவசாயிகள் கூறியதாவது,

நாங்கள் இரண்டாம் அடி கரும்பு வளர்த்து அறுவடைக்குத் தயாராகி மூன்று மாதம் ஆகிவிட்டது. சர்க்கரை ஆலை நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொண்டும் கரும்பு வெட்டுவதற்கு தொழிலாளர்களை அனுப்பவில்லை. எங்கள் பகுதியில் தற்போது தான் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் இங்குள்ள தொழிலாளர்களுக்கு கரும்பு வெட்டப்போதிய அனுபவமும் இல்லை. வேறு வழிஇல்லாமல் ஆலை நிர்வாகத்தின் அனுமதியுடன் நாங்கள் கரும்பை வெட்டினோம். அந்தக் கரும்பையும் கொள்முதல் செய்ய காலம்தாழ்த்தி வருகின் றனர். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்பிற்கும் பணம் பலருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலை இன்னும் ஒருவாரம் நீடித்தால் அறுவடை செய்யப்பட்ட அனைத்து கரும்புகளும் அடிக்கின்ற வெயிலில் விறகாகப் போய்விடும் என வேதனையுடன் தெரிவித்தனர். பொதுவாக சாத்தான்குளம் பகுதி கரும்பு சாகுபடிக்கு ஏற்ற நீர்வளம் கொண்ட பகுதி அல்ல. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட செலவழிக்கும் கிணற்று நீரிலிருந்து 20 ஏக்கர் பருத்திச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும்.

எனவே நிலத்தடி நீர் அதிகமாக வீணாகிறது. இதனால் வறட்சி அதிகரிக்கவே செய்யும். மேலும் நல்ல நீரில் விளையாத கரும்பில் சர்க்கரை ஆலைக்கு தேவையான அளவு பிழிதிறன் இல்லை. எனவே இந்தக் கரும்பு சர்க்கரை ஆலைகளுக்கு மற்ற பகுதியில் உள்ளதுபோல் லாபம் தருவதாக இல்லை. குறைந்த அளவு லாபம் உள்ளதால் இரண்டாம் அடி கரும்புகளை கொள்முதல் செய்ய தயங்குகின்றனர். அதை விவசாயிகளிடம் தெரிவிக்காமல் உள்ளனர்.வேளாண்மை அதிகாரிகள் எந்தப் பகுதியில் என்ன பயிரிட வேண்டும் என விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கினால் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் ஆசை வார்த்தைகளில் விவசாயிகள் மயங்கி தங்கள் நிலவளத்தையும், நீர்வளத்தையும் இழப்பது தவிர்க்கப்படும். உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாகும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us