Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சுற்றுப்புற உள்ளாட்சிகளை இணைத்து காஞ்சிபுரம் நகராட்சி மறுசீரமைப்பு

சுற்றுப்புற உள்ளாட்சிகளை இணைத்து காஞ்சிபுரம் நகராட்சி மறுசீரமைப்பு

சுற்றுப்புற உள்ளாட்சிகளை இணைத்து காஞ்சிபுரம் நகராட்சி மறுசீரமைப்பு

சுற்றுப்புற உள்ளாட்சிகளை இணைத்து காஞ்சிபுரம் நகராட்சி மறுசீரமைப்பு

ADDED : ஜூலை 11, 2011 11:30 PM


Google News

காஞ்சிபுரம் நகராட்சி எல்லை விரிவுப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, சுற்றியுள்ள உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டு, 51 வார்டுகளாக மறு சீரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அரசாணை எண் 131ன்படி, நகர்புற உள்ளாட்சிகளின் தரம் உயர்த்துதல், தரம் இறக்குதல், எல்லைகளை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக, நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அதன்படி, செவிலிமேடு பேரூராட்சி, ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை ஊராட்சி ஆகியவற்றை, நகராட்சியோடு இணைத்து நகராட்சி எல்லையை விரிவுப்படுத்த, 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி, காஞ்சிபுரம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதையடுத்து, மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய், தனிநபர் வருமானம், பரப்பளவு அடிப்படையிலான வருமானம், உள்கட்டமைப்பு வசதிகள், மேலாண்மை செய்ய இயலும் நிலை, நகரமயமாதல் விதி ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு ஆலோசனை கூட்டங்களுக்குப் பின், 2010 நவம்பர் 9ம் தேதி, செவிலிமேடு பேரூராட்சி மற்றும் நத்தப்பேட்டை, ஓரிக்கை, தேனம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை, முழுமையாக, காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைக்க உத்தேசித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண் 277 மூலம், உத்தரவு பிறப்பித்தது.



அதன்பின், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 4 (3)ன்படி, காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைக்க, உத்தேசிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் விவரம், கடந்த ஜனவரி 14ம் தேதி அரசு பதிவிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, காஞ்சிபுரம் நகராட்சி எல்லை 36.14 சதுர கிலோ மீட்டராக விரிவடையும். விரிவாக்கப்பட்ட எல்லையில், மக்கள் தொகை, 1 லட்சத்து 97 ஆயிரத்து 288 ஆக இருக்கும். விரிவாக்கம் செய்யப்படும் காஞ்சிபுரம் நகராட்சிக்கு, 51 வார்டுகளை நிர்ணயம் செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண் 90ன்படி, கடந்த ஜூன் 28ம் தேதி, உத்தரவிட்டு, அதேநாளில் அரசு பதிவிதழிலும் வெளியிடப்பட்டது.



மேலும், உள்ளாட்சிகளின் சராசரி மக்கள் தொகை, வருவாய், பரப்பளவு, வேகமாக நகராகி வரும் பகுதி, மிதமாக நகரமயமாகி வரும் பகுதி மற்றும் நகர எல்லையை ஒட்டிய பகுதிகள் என தரம்பிரித்து, காஞ்சிபுரம் நகரில் உள்ள தற்போதுள்ள 45 வார்டுகள் 40 வார்டுகளாகவும், இணைக்கப்பட உள்ள இதர உள்ளாட்சிகளில் உள்ள 25 வார்டுகள், 11 வார்டுகளாகவும் மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம் நகராட்சி, மொத்தம் 51 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சி வார்டு மறுசீரமைப்பு சிறப்பு பணி அலுவலராக செங்கல்பட்டு, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார். விரிவாக்கம் செய்யப்பட்ட காஞ்சிபுரம் நகராட்சியின் உத்தேச வார்டுகள், எல்லைகள் குறித்த கருத்துகளை, நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென, தண்டபாணி, நகராட்சியிடம் கருத்து கோரியுள்ளார்.



- என்.ஏ.கேசவன் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us