தி.மு.க.,வினர் மீது குவிகிறது நில மோசடி புகார்கள் : மாஜி அமைச்சர் மீது 20 கோடி ரூபாய் புகார்
தி.மு.க.,வினர் மீது குவிகிறது நில மோசடி புகார்கள் : மாஜி அமைச்சர் மீது 20 கோடி ரூபாய் புகார்
தி.மு.க.,வினர் மீது குவிகிறது நில மோசடி புகார்கள் : மாஜி அமைச்சர் மீது 20 கோடி ரூபாய் புகார்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரத்தில், 20 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மீது, பெண் புகார் செய்துள்ளார்.
திருச்சியில் கோகிலா வசித்து வந்த நிலையில், அவரது நிலத்தை எமனேஸ்வரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, கந்தம்மாள், சோமு, வெள்ளைச்சாமி, சிவகாமி, எமனேஸ்வரம் மலையான் குடியிருப்பைச் சேர்ந்த கருப்பையா ஆகியோர், பரமக்குடி நகராட்சியில் போலி ஆவணம் தயார் செய்து விற்றனர்.
இதையறிந்து விசாரிக்கச் சென்ற அவரை, சிலர் மிரட்டினர். இதுதொடர்பாக தாசில்தார், ஆர்.டி.ஓ.,விடம் புகார் செய்து, விசாரித்ததில், சொத்துக்கள் போலியாக பட்டா பெற்று, நகராட்சி ரிக்கார்டுகளிலும் மாறுதல் செய்தது தெரியவந்தது.
கோகிலா கூறுகையில்,'நகராட்சியில் போலி பட்டா தயார் செய்து, 15 ஏக்கரில், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 ஏக்கரை விற்று விட்டனர். நகராட்சியில்,'முன்னாள் அமைச்சர் தங்கவேலன் தலையீடு இருப்பதால் எதுவும் செய்ய முடியாது' என கூறிவிட்டனர். 'ஐந்து ஆண்டுகளாக எனது உரிமையை நிலைநாட்ட போராடி வருகிறேன். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மற்றும் அவரது உறவினர்கள் மீது, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் கொடுத்துள்ளேன்' என்றார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் ஆதிதிராவிடர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் சிலர், மா.கம்யூ., மாவட்ட செயலர் ஆனந்தன் தலைமையில், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.
தங்கள் நிலப்பட்டாவை மோசடி செய்து வரும் தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனு கொடுத்தனர். அம்மனுவை, நில மோசடி புகார்களை விசாரிக்கும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, எஸ்.பி., உத்தரவின்படி அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மா.கம்யூ., மாவட்ட செயலர் ஆனந்தன் கூறுகையில், 'அரகண்டநல்லூர் தலித் மக்களுக்கு வழங்கிய பஞ்சமி நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் தி.மு.க., நகர துணைச் செயலர் முருகேசன் ஏமாற்றி, தன் பெயருக்கு பட்டா மாற்ற முயற்சித்துள்ளார். 12 குடும்பத்தினரின், 4 ஏக்கர் அளவிலான நிலத்தை கையகப்படுத்திக் கொள்ள முருகேசன் முயற்சித்து வருகிறார். இதைத் தடுத்து நிறுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
திருப்பூரில், மாவட்ட அளவில் நில அபகரிப்பு தொடர்பாக, 104 பேர் 'ஹிட் லிஸ்ட்'டில் சேர்க்கப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகளை, போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ரவுடிகளாக செயல்பட்ட, 22 பேர் குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட அளவில் நில அபகரிப்பு தொடர்பான, 52 புகார்கள், விசாரணையில் உள்ளன. நில அபகரிப்பு புகார்களை பதிவு செய்த போலீசார், அவ்வழக்கு தொடர்பான ஆவணங்களைத் திரட்டி வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட புகார்தாரர் தரப்பில், சொத்து குறித்த ஆவணங்களை தருவதில் தாமதம் ஏற்படுத்துகின்றனர். இதனால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தி தாலுகா கல்கடம்பூரைச் சேர்ந்தவர் செட்டி ஆண்டி, 70; விவசாயி. இவர், தன் மனைவி காளியம்மாள், மகன்கள் அண்ணாமலை, 40, குப்புசாமி, 36, ஆகியோருடன், ஈரோடு எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனு:
எங்கள் பூர்வீக சொத்தான, 4 ஏக்கர் பூமியை, தாசம்பாளையம் கிருஷ்ணசாமிக்கு, 1.35 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்தேன். என் அண்ணன் அண்ணாமலையும், 60 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தார். அடமானம் வைத்த ஓராண்டுக்குள், கிருஷ்ணசாமியிடம் செய்த ஒப்பந்தத்தை, ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜாவின் ஆட்கள் மூர்த்தி, சேகர் ஆகியோர் பெயரில் மாற்றிக் கொண்டனர்.
இதுபற்றி, சத்தி முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., தர்மலிங்கத்திடம் கேட்டதற்கு, 'இது அமைச்சரின் பிரச்னை; நான் தலையிட முடியாது. கிருஷ்ணசாமி கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு செல்லுங்கள்; நிலத்தை திருப்பித் தர முடியாது' என்றார்.
இப்பிரச்னைக்குப் பின் மூன்றாவது நாள், கிருஷ்ணசாமியின் ஆட்கள், 100 பேர் கொண்ட கும்பல், கத்தி, அரிவாளுடன் வந்தனர். 'கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ஓடிவிடு' என மிரட்டினர். பணத்தை வாங்க மறுத்து விட்டேன். போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தால், கொன்று விடுவதாக மிரட்டினர். கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவர் மாரிச்சாமி முன்னிலையில், என் அண்ணனுக்கு 4.75 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்தனர். நான் இழந்த பூமியை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.