ADDED : ஆக 07, 2011 01:35 AM
திருவண்ணாமலை : ''தமிழகத்தில் இதுவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்கு, மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திருவண்ணாமலையில் பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இனி வரும் காலங்களில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது கிடையாது என்ற நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதில், பா.ம.க., கடைசி வரை உறுதியாக இருக்கும். ஓட்டுக்காக இலவசங்களை கொடுத்து மக்களை உழைக்கச் செய்யாமல் சோம்பேறித்தனமாக்குவது போன்ற செயல்களில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் செய்து வருகின்றன. இதற்கெல்லாம் ஆண்ட கட்சி, ஆளும் கட்சி, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வளவு மோசமான கட்சிகளிடம் பா.ம.க., இதுவரை கூட்டணி வைத்ததற்காக, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இனி வரும் காலங்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காது. பா.ம.க.,வுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், பா.ம.க.,வின் தலைமையின் கீழ் இணைந்து செயல்படும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிடும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.