உள்ளாட்சி தேர்தலில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்துவதில் சிக்கல்
உள்ளாட்சி தேர்தலில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்துவதில் சிக்கல்
உள்ளாட்சி தேர்தலில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்துவதில் சிக்கல்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளில், தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தினால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபரில், உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.
தற்போது, சில சட்டசபை தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. 45 நாட்கள் முடிந்துவிட்டதால், வழக்கு தொடரப்படாத தொகுதிகளின் மின்னணு இயந்திரங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, அதிலுள்ள விவரங்களை அழித்துவிட்டு, உள்ளாட்சித் தேர்தலுக்காக அவற்றை வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இதன்படி, 40 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள், மாநில தேர்தல் கமிஷனிடம் ஒப்படைப்பதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை நடத்தும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதாவது, மாநகராட்சிகளின் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தும் முறையை கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருகிறது. அவ்வாறு செய்தால், நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் பதவிக்காக ஒரு ஓட்டும், கவுன்சிலர் பதவிக்காக ஒரு ஓட்டும் என ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டியிருக்கும். ஏற்கனவே, நகர்பகுதிகளில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடிகளில், மின்னணு இயந்திரங்கள் தேவைக்கும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டிருக்கும். அவற்றை கணக்கிட்டு தான், 40 ஆயிரம் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு ஓட்டுகள் போட வேண்டுமென்றால், இன்னொரு மடங்கு கூடுதலாக மின்னணு இயந்திரங்கள் தேவைப்படும். தேவை அதிகரிப்பதோடு, அதிகாரிகளுக்கு பயிற்சி, கூடுதல் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தால், கூடுதலாக தேவைப்படும் இயந்திரங்கள் என, தேவைகள் அதிகரிக்கும். அவற்றை சமாளிக்கும் அளவுக்கு, தற்போது மின்னணு இயந்திரங்கள் இல்லை.
இந்நிலையில், நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை தேர்வு செய்வதால் ஏற்படும் சிக்கல் குறித்தும், தற்போது தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது. தலைவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், பெரும்பாலான கவுன்சிலர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்தால், உள்ளாட்சிகளில் தீர்மானங்களை நிறைவேற்றுதல், திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும். ஏற்கனவே, சென்னை மேயராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அ.தி.மு.க., கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், மாநகராட்சி கூட்டத்தை கூட அவரால் சுமுகமாக நடத்த முடியவில்லை. மாநகராட்சியில் அவரால் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பின், ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் இவரது பதவி பறிக்கப்பட்டது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நேரடியாக நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் நேரடி தேர்வு முறையை கொண்டு வர அ.தி.மு.க., அரசு விரும்புகிறது. எனினும், அவ்வாறு செய்தால் ஏற்படும் குழப்பங்களையும் கருத்தில் கொண்டு, பரிசீலனை செய்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் பொதுத் தேர்தலுக்கு இதுவரை, மின்னணு இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. தற்போது முழு அளவில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்தினால், இரண்டு பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதில் சிரமம் ஏற்படும். ஒரு பதவிக்கு 16க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தால், அந்த பதவிக்கு கூடுதல் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். இவற்றை எல்லாம் ஆய்வு செய்து, வரும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே தன் முடிவை அரசு அறிவிக்க உள்ளது.
சென்னைக்கு அ.தி.மு.க., மேயர் முதல் முறையாக கிடைப்பாரா? நகர்ப்புற உள்ளாட்சிகளில் அ.தி.மு.க., வெற்றி தோல்விகளை சந்தித்தாலும், சென்னையைப் பொறுத்தவரை, அக்கட்சி சார்பில் மேயர் பதவிக்கு இதுவரை யாரும் வந்ததில்லை. எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து, நகர்ப்புற உள்ளாட்சிகளில் அ.தி.மு.க., பல்வேறு வெற்றிகளைக் குவித்து வந்துள்ளது. மாநகராட்சி மேயர் பதவிகளையும் வகித்து வந்துள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர்., காலத்திலும் சென்னை மேயர் பதவியை, அ.தி.மு.க., பெற்றதில்லை என்ற குறைபாடு உள்ளது. உள்ளாட்சிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல், 1996ல் தான் மீண்டும் கொண்டு வரப்பட்டது. அப்போது தான், சென்னை மேயராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின், 2001ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்த போது, சென்னை மேயர் பதவிக்கு ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும், அதிகளவில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இதனால், மாநகராட்சி கூட்டங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஸ்டாலினின் மேயர் பதவி பறிக்கப்பட்ட பின், மேயர் பதவிக்கென தேர்தலை அ.தி.மு.க., அரசு நடத்தவில்லை. துணை மேயராக தேர்வு செய்யப்பட்டிருந்த கராத்தே தியாகராஜனைக் கொண்டே, மன்றக் கூட்டங்களை நடத்தியது. அவரே மேயர் அந்தஸ்தில் செயல்பட்டு வந்தார். மீண்டும், 2006ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட போது, மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்தவில்லை. கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்வு செய்தனர். இதன்படி, சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்ட மா.சுப்ரமணியன், தற்போது தொடர்ந்து மேயர் பதவியை வகித்து வருகிறார். வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது, சென்னை மேயர் பதவியை பிடிக்க அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. முதல் முறையாக அ.தி.மு.க., மேயர் ஒருவரை, பதவி அமர்த்த விரும்புகிறது. இந்த விருப்பம் நிறைவேறுமா? என்பது, உள்ளாட்சித் தேர்தலின் முடிவில் தெரியவரும். அவ்வாறு வெற்றி பெற்றாலும், யார் மேயர் பதவிக்கான வேட்பாளர் என்ற பேச்சு, இப்போதே அ.தி.மு.க., வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.
பா.பாஸ்கர்பாபு