/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் :புரோக்கர், பைலட்கள் உட்பட 4 பேர் கைதுகேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் :புரோக்கர், பைலட்கள் உட்பட 4 பேர் கைது
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் :புரோக்கர், பைலட்கள் உட்பட 4 பேர் கைது
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் :புரோக்கர், பைலட்கள் உட்பட 4 பேர் கைது
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் :புரோக்கர், பைலட்கள் உட்பட 4 பேர் கைது
ADDED : செப் 20, 2011 11:43 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 1,900 கிலோ
ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தியவர், புரோக்கர்
மற்றும் பைலட்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க இரவு நேர
கண்காணிப்பை பலப்படுத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில்,
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் துறை தனித்தாசில்தார் சக்திவேல்,
குடிமைப்பொருள் புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வின்
சாந்தகுமார் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி அடுத்த ஓரக்கலியூரில் வாகன தணிக்கை செய்த போது,
டிஎன்39 ஏஇ 4782 என்ற டெம்போவை சோதனைக்கு உட்படுத்தினர். டெம்போ டிரைவர்
ஓடிச்செல்லாதபடி அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். டெம்போவை சோதனை
செய்தபோது, ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் 1,900 கிலோ பதுக்கி வைத்திருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ரேஷன் அரிசியுடன் டெம்போவை ஓட்டி
சென்றவர் பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்தை ஷாஜகான்(26) என்பது
தெரியவந்தது. ஷாஜகான் கொடுத்த தகவலின் பேரில், அதேபகுதியில் ரேஷன் அரிசி
டெம்போவுக்காக பைக்கில் (டிஎன் 39 எச் 0478) காத்திருந்த அம்பராம்பாளையத்தை
சேர்ந்த சிராஜ்தீன்(23), ஜெயினுலாப்தீன்(23) ஆகியோரையும் புலனாய்வு
போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு ரேஷன் அரிசி வாங்கி கொடுத்த,
சோமந்துரைசித்தூரை சேர்ந்த முத்துலட்சுமி(45) என்பவரையும் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தி டெம்போ, பைலட்களின் பைக், கடத்தப்பட்ட
ரேஷன் அரிசி அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு,
3.5 லட்சமாகும்.
தனித்தாசில்தார் கூறுகையில், 'ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை,
மக்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்குகின்றனர். சோமந்துரைசித்தூரை
சேர்ந்த முத்துலட்சுமி புரோக்கராக செயல்பட்டு, ஒவ்வொரு வீடாக ரேஷன் அரிசியை
விலை கொடுத்து வாங்கி சேகரித்து கொடுத்துள்ளார். ரேஷன் அரிசியை ஷாஜகான்
என்பவர் சொந்த டெம்போவில் கடத்திய போது பிடிபட்டார். அதிகாரிகள் ரெய்டு
செய்கிறார்களா என்பதை கண்காணித்து தெரிவிக்க பைக்கில் பைலட்களாக சென்ற
ஷாஜகானின் உறவினர்கள் இருவரையும் கைது செய்துள்ளோம். பொதுமக்களுக்கு
வழங்கும் ரேஷன் அரிசியை கடத்துவது பற்றி தகவல் தெரிந்தால், குடிமைப்பொருள்
வழங்கல் துறைக்கு 94450 00252 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அரிசி கடத்துவதை
தடுக்க மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்றார்.