Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இரு ஆண்டுக்கு பின் கரைபுரண்டு ஓடும் காவிரி

இரு ஆண்டுக்கு பின் கரைபுரண்டு ஓடும் காவிரி

இரு ஆண்டுக்கு பின் கரைபுரண்டு ஓடும் காவிரி

இரு ஆண்டுக்கு பின் கரைபுரண்டு ஓடும் காவிரி

ADDED : ஜூலை 17, 2011 01:26 AM


Google News
மேட்டூர்: இரு ஆண்டுக்கு பின் தட்சிணாயன புண்ய காலம் துவங்கும், ஆடி1 ம் தேதி காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது கரையோர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தட்சிணாயன புண்ய காலம் துவங்கும் நாளில் பாவங்கள் விலகி நன்மைகள் தொடர கரையோர மக்கள் காவிரியாற்றில் புனித நீராடுவர். பாரதத்தில் கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, காவிரி ஆகிய ஏழு நதிகளையும் சப்த புண்ய நதிகளாக ஹிந்துக்கள் கருதினர்.

எனவே, பக்தர்கள் பாவங்களை போக்க சப்த புண்ணிய நதிகளில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது வழக்கம். சப்த நதிகளில் காவி மட்டுமே தட்சிணாயன காலம் துவங்கும் ஆடி மாதத்தில் தான் பருவமழை தீவிரம் அடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அதனால், தட்சிணாயன புண்ய நதி என்ற பெருமை காவிரிக்கு மட்டுமே உண்டு.ஆண்டில் தை முதல் ஆனி வரையிலான, ஆறு மாதம் உத்ராயண காலம், ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதம் தட்சிணாயன காலம் என, முன்னோர்கள் ஒரு ஆண்டை இரண்டாக பிரித்துள்ளனர். தட்சிணாயன காலம் துவங்கும், ஆடி1ல்தான் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கு பாரதபோர் குருஷேத்திரத்தில் துவங்கியது.தொடர்ந்து, 18 நாள் நடந்த பாரதபோர், ஆடி18ல் முடிவுக்கு வந்தது. போரில் வென்ற பாண்டவர்கள் தாங்கள் பயன்படுத்திய வாள், வேல், வில், அம்பு போன்ற ஆயுதங்கள் அனைத்தையும் தட்சிணாயத்தில் பிரவாகம் எடுத்த காவிரியில் கழுவி, பாவத்தை போக்கினர்.அதனால், காவிரி பிரவாகம் எடுக்கும் ஆடி மாதம் முழுவதும் காவிரி கரையோர மக்கள் தங்கள் குலதெய்வம், காவல்தெய்வங்களுக்கு விழா எடுப்பார்கள். ஆடி1ம் தேதி காவிரி கரையோர பொதுமக்கள், புதுமண தம்பதியர் தங்கள் பாவங்களை போக்கவும், நன்மைகள் தொடரவும் தட்சிணாயன புண்ய நதியான காவிரியில் புனித நீராடுவர்.

இன்று ஆடி1ம் தேதி என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும், ஒகேனக்கல், மேட்டூர், பவானி, திருச்சி, தஞ்சை உள்பட காவிரி கரையில் பக்தர்கள், புதுமண தம்பதியர் கூட்டம் நிரம்பி வழியும். 2009, 2010 என, இரு ஆண்டுகளிலும் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால், ஜூலை 28ம் தேதி தான் பாசனத்துக்கு நீர்திறக்கப்பட்டது.இரு ஆண்டுகளிலும், ஆடி1ம் தேதி தமிழகத்தில் காவிரியாறு வறண்டு காணப்பட்டது. நடப்பாண்டில் டெல்டா பாசனத்துக்கு, ஜூலை 6ம் தேதி நீர்திறக்கப்பட்டது. தற்போது விநாடிக்கு, 13 ஆயிரம் கனஅடி நீர் செல்வதால், காவிரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.இரு ஆண்டுக்கு பின் தட்சிணாயன புண்யகாலம் துவங்கும் ஆடி1ம்தேதி (இன்று) காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவது கரையோர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதனால், பல லட்சம் மக்கள் இன்று காவிரியில் புனித நீராடி வழிபாடு செய்வர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us