Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/எஸ்டேட் அதிபரிடம் தோட்டக்கலை அதிகாரிகள் பணம் மோசடி

எஸ்டேட் அதிபரிடம் தோட்டக்கலை அதிகாரிகள் பணம் மோசடி

எஸ்டேட் அதிபரிடம் தோட்டக்கலை அதிகாரிகள் பணம் மோசடி

எஸ்டேட் அதிபரிடம் தோட்டக்கலை அதிகாரிகள் பணம் மோசடி

ADDED : ஜூலை 17, 2011 01:22 AM


Google News
சேலம்: ஏற்காட்டில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், மரம் வெட்ட எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு, டெண்டர் மூலம், அதிகாரிகள்அனுமதி வழங்கினர். லாரிகளில் அவற்றை எடுத்து செல்ல முயன்றபோது, வருவாய் புறம்போக்கில் வெட்டப்பட்டுள்ளதாக கூறி தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளிடம், பணத்தை இழந்த எஸ்டேட் அதிபர் முதல்வர் தனிப்பிரிவுக்கு, மோசடி குறித்து புகார் அனுப்பியுள்ளார்.சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, முளுவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(40); காஃபி எஸ்டேட் அதிபர். அதுமட்டுமின்றி, அரசு அனுமதியுடன் மரங்களை வெட்டி எடுத்து, சேலத்தில் உள்ள மர அறுவை மில்லுக்கு அனுப்பும் தொழிலும் செய்து வருகிறார்.தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ஏற்காட்டில் உள்ளது. இங்குள்ள, 21 பலஜாதி மரங்களை வெட்டிக் கொள்ள, ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் அருள்மொழியன் மூலமாக, 2010 நவ., 9ம் தேதி டெண்டர் அறிவிக்கப்பட்டது. அதற்கான, விண்ணப்ப படிவம் விலை, 3,120 ரூபாய். பூர்த்தி செய்த படிவத்தை மூடிய உறையில் இட்டு பெட்டியில் போடும்போது, 7,000 ரூபாய்க்கான வங்கி காசோலை இணைத்து வழங்க வேண்டும்.

அதன்படி, ஆராய்ச்சி நிலைய பகுதியில் மரம் வெட்டும் டெண்டரில், 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எஸ்டேட் அதிபர் சந்தோஷ்குமார், 90 ஆயிரம் ரூபாய் விலைப்புள்ளி குறிப்பிட்டிருந்தார். அவருக்கு டெண்டர் வழங்கப்படும் நிலையில், குறைவான தொகை என, கூறி அந்த டெண்டரை தள்ளுபடி செய்தனர். மீண்டும், டிசம்பர் 15ம் தேதி மறு ஏலம் விடப்பட்டது. அப்போதும், படிவத்துடன் வங்கி காசோலை வழங்கி சந்தோஷ்குமார் விண்ணபித்தார்.

அந்த டெண்டர், 1.65 லட்சம் ரூபாய்க்கு போனது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், தங்களுக்கு கமிஷன் கொடுத்து விட்டு, மரங்களை வெட்ட வேண்டும் என, வற்புறுத்தினர். சந்தோஷ்கமார் பணம் கொடுக்க மறுத்ததால், டெண்டர் விலைப்புள்ளியை, 1.65 லட்சம் ரூபாயில் இருந்து, 1.80 லட்சம் ரூபாயாக உயர்த்தி விட்டனர்.

அதன்பின்னர், வருவாய்த்துறையினர், புறம்போக்கில் மரம் வெட்டப்பட்டுள்ளது என கூறி, மரங்களை எடுத்து செல்ல தடை விதித்தனர். வேளாண் பல்கலை அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கு தெரியாது என, கைவிரித்து விட்டனர். பணத்தை இழந்த சந்தோஷ்கமார் கூறியதாவது:தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்துக்கு, 150 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் அருகிலேயே, தனியார் ஒருவருக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலம் உள்ளது. அவருடைய நிலத்துக்கு செல்வதற்கு பாதை வசதி கிடையாது. அப்போது, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், பாதை வசதி கேட்டிருந்தார். ஐந்து ஏக்கர் நிலம், ஆராய்ச்சி நிலையத்துக்கு இலவசமாக கொடுக்கவும் அவர் முன்வந்தார். அதையடுத்து, ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தில் இருந்த, 21 வகை பலஜாதி மரங்களை வெட்ட டெண்டர் விடப்பட்டது. ஆரம்பத்தில், 90 ஆயிரம் ரூபாய்க்கு நான் டெண்டர் எடுத்தேன். அதிகாரிகள் என்னிடம் லஞ்சம் கேட்டனர். நான் கொடுக்க மறுத்ததால், அந்த டெண்டரை கேன்சல் செய்து விட்டு மறு டெண்டர் விட்டனர்.

அப்போது, 1.65 லட்சம் ரூபாய்க்கு போனது. 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றனர். நான் கொடுக்க முடியாது என, கூறியதையடுத்து, டெண்டரை, 1.80 லட்சம் ரூபாயாக உயர்த்தி விட்டனர். அவர்களுக்கு லஞ்சமாக செல்லக்கூடாது, அரசுக்கு வேண்டுமானாலும் போகட்டும் என, ரசீது கேட்டு வாங்கினேன். 10 வட்டிக்கு கடனை வாங்கி பணத்தை செலுத்தி, மரங்களை வெட்டி எடுக்க முயன்றபோது, வருவாய்த்துறை அதிகாரிகள், மரங்களை எடுக்கக்கூடாது. அது வருவாய் புறம்போக்கில் உள்ளது என, கூறி தடை விதித்தனர்.தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் சமாளிக்கும் போக்கை தொடர்ந்தனர். சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது, தேர்தலுக்கு பின் தான் மரங்களை எடுக்க முடியும் என, கூறி காலம் தாழ்த்தினர். கோவை வேளாண் பல்கலை அதிகாரிகளும், தவறு எங்கள் பக்கம் தான், பணத்தை அரசுக்கு செலுத்தி விட்டோம், அதை திரும்ப கொடுக்க முடியாது. மரத்தை எடுத்து செல்வதற்கு உண்டான முயற்சிகளை எடுக்கிறோம் என, கூறி என்னை ஏமாற்றி வந்தனர்.இந்த நிலையில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு பகுதியை, ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்த தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர். பணத்தையும் இழந்து, மரங்களையும் எடுக்க முடியாமல் தவிக்கிறேன். அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. தமிழக முதல்வர், அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு, என்னுடைய பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் அருள்மொழியன் கூறியதாவது:அப்போதைய கலெக்டர் உத்தரவின்பேரில், ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் பார்வையிட்ட பின் தான், அந்த மரங்கள் டெண்டர் விடப்பட்டது. 90 ஆயிரம் ரூபாய்க்கு, சந்தோஷ்குமார் டெண்டர் எடுக்க முயற்சித்தபோது, வேளாண் பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து விலைப்புள்ளி குறைவாக உள்ளது என, கூறினர். அதைத்தொடர்ந்து மறு ஏலம் விடப்பட்டது. அதில், 1.80 லட்சம் ரூபாய்க்கு அவரே டெண்டர் எடுத்தார்.மரத்தை எடுக்க முயற்சித்த போது தான், அது புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்தது. புறம்போக்கு சர்வேயில் அந்த நிலம் இருந்தது, 2006ல் இருந்து யாருக்கும் தெரியவில்லை. சந்தோஷ்குமாரும், குறிப்பிட்ட காலத்தில் மரத்தை எடுக்கவில்லை. இதனிடையே, தேர்தல் வந்து விட்டது. தற்போது, அந்த மரங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி கேட்டு, பதிவாளர் மூலம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஒரு மாதமாக கலெக்டர் டேபிளிலேயே, அந்த கடிதம் உள்ளது. அவர் கையெழுத்திட்டால், சந்தோஷ்குமாருக்கு ஒரு வழிபிறக்கும். மற்றபடி நாங்கள் எதுவும் லஞ்சம் கேட்கவில்லை. எதுவாக இருந்தாலும், வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை, நான் இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு பேராசிரியர். மற்றதெல்லாம், துணைவேந்தரும், பதிவாளரும் தான். இந்த பிரச்னைக்கு சீக்கிரம் ஒரு முடிவு கிடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us