Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வீட்டு வசதி வாரிய வீடுகளில் குடியேற முடியாமல் தவிப்பு : அடிப்படை வசதி "நஹி'

வீட்டு வசதி வாரிய வீடுகளில் குடியேற முடியாமல் தவிப்பு : அடிப்படை வசதி "நஹி'

வீட்டு வசதி வாரிய வீடுகளில் குடியேற முடியாமல் தவிப்பு : அடிப்படை வசதி "நஹி'

வீட்டு வசதி வாரிய வீடுகளில் குடியேற முடியாமல் தவிப்பு : அடிப்படை வசதி "நஹி'

ADDED : ஜூலை 13, 2011 11:03 PM


Google News

சோழிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட இடத்தில், முறையான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், மனை வாங்கியவர்கள் வீடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், கடந்த 2000ம் ஆண்டில் 1.78.23 எக்டேர் அளவில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டன. இதில், குறைந்த வருவாய் பிரிவில் 678 மனைகளும், மத்தியதர வருவாய் பிரிவில் 234 மனைகளும், உயர் வருவாய் பிரிவில் 507 மனைகளும் வீட்டு வசதி வாரியத்தால் பிரித்து விற்பனை செய்யப்பட்டது.



இது மட்டுமல்லாமல் தொகுப்பு வீடுகளுக்காக, 141 மனைகள் பிரிக்கப்பட்டன. இவற்றை சேர்த்து,மொத்தம் 1,673 மனைகள் விற்பனை செய்யப்பட்டன. அந்த இடங்களை வாங்கிய பெரும்பாலானோர் விற்பனை ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.அந்த இடத்திற்கான 'லே-அவுட்' போட்டபோது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அனைத்து அடிப்படை வசதிகளுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அங்கு பொதுமக்கள் குடியேறும் வகையில் தற்போது இல்லை. எனவே, அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, மனை வாங்கியவர்கள் மற்றும் வீடுகட்டி குடியேறிய சிலர் கூறுகையில்,''அரசு நிலத்தை வாங்கினால், அடிப்படை வசதிகளுக்கு குறைவிருக்காது என்ற நம்பிக்கையில் இடம் வாங்கினோம். ஆனால், இங்கு வீடு கட்டி குடியேற முடியாத நிலை உள்ளது. சாலைகள் படுமோசமாக உள்ளது. குடிநீர், சாலை மின் விளக்கு வசதிகள் இல் லை. பாதாள சாக்கடை அமைக்கப்பட்டிருந்தாலும் செயல்படவில்லை.



மேலும், இப்பகுதி கடந்த சில ஆண்டுகளாக சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. வார விடுமுறை நாட்களில்,'குடிமகன்'களின் திறந்தவெளி, 'பார்' ஆக இப்பகுதி செயல்படுகிறது. இதன் காரணமாகவே, பலர் இங்கு வீடு கட்ட பயப்படுகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து வீடு கட்டிய சிலரும் இங்கு குடியிருக்க அச்சப்படுகின்றனர். எனவே, இங்கு வீடுகள் கட்டி குடியேறும் வகையில் பாதுகாப்பும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்,''என்றனர்.இப்பிரச்னை குறித்து கேட்டபோது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன்,''சோழிங்கநல்லூர் வீட்டுமனை திட்டத்தில், முறைப்படி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



கடந்த 2007ம் ஆண்டு அந்த இடத்திற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சோழிங்கநல்லூர் பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சாலை, மின் விளக்கு, பூங்கா மற்றும் திறந்தவெளி பகுதிகளை ஏற்றுக் கொண்டனர். குடிநீர், பாதாளசாக்கடை ஆகியவற்றை ஏற்க மறுத்துவிட்டனர். பராமரிப்பு பணிகளை பேரூராட்சியினர் தான் செய்ய வேண்டும்'' என்றார். மேலும், அவர் கூறுகையில், ''சாலை, மின்சாரத்திற்கு தேவையான நிதி அளிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செய்து கொடுக்க வேண்டிய அனைத்தும் செய்துவிட்டது.



ஆனால், மனைகள் வாங்கியவர்கள் எதிர்பார்த்த அளவு வீடுகளை கட்டி குடியேறவில் லை,'' என்றார்.சோழிங்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்,''வீட்டு வசதி வாரியத்தில் மனைகள் வாங்கியவர்களில் ஒரு சிலர் மட்டுமே வீடுகளை கட்டி குடியேறியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. ராஜிவ்காந்தி சாலையில் இருந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.



ஏழு லட்சம் ரூபாய் செலவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பேரூராட்சியை பொறுத்தவரை, மக்கள் வீடு கட்டி குடியேறிய பிறகே, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க முடியும்,'' என்றார்.எனவே, வீட்டுவசதித்துறை அமைச்சர் இப்பகுதியை நேரில் ஆய்வு மேற்கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உத்தரவிட்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us