போயஸ் கார்டனில் அ.தி.மு.க., தொண்டர் தீக்குளிக்க முயற்சி
போயஸ் கார்டனில் அ.தி.மு.க., தொண்டர் தீக்குளிக்க முயற்சி
போயஸ் கார்டனில் அ.தி.மு.க., தொண்டர் தீக்குளிக்க முயற்சி

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில், சீட் கிடைக்காமல் அதிருப்தி அடைந்தவர்கள், முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் அருகிலும், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் முன்பும், நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சிக்கு, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும், 200 வேட்பாளர்களின் பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு அறிவித்தார்.
தென் சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள சில வார்டுகளுக்கு, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும், முதல்வரின் உதவியாளரிடம் கட்சியினர் வழங்கினர். வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, எம்.ஜி.ஆர்., நகரில், அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர். பெரம்பூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், தனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்திற்கு வந்து, பின்னி சாலை அருகில் நின்று கொண்டு, தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால், தீக்குளிக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தி, அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.