Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அடுத்தவர் நிலத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது விதிமீறல் வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை

அடுத்தவர் நிலத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது விதிமீறல் வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை

அடுத்தவர் நிலத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது விதிமீறல் வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை

அடுத்தவர் நிலத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது விதிமீறல் வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை

UPDATED : ஜூலை 27, 2011 02:24 AMADDED : ஜூலை 27, 2011 02:21 AM


Google News
சென்னை : தங்கள் கட்டடத்துக்கான வாகன நிறுத்துமிடத்தை, அடுத்தவர் நிலத்தில் கணக்கு காட்டும் வணிகவளாகங்கள் மீது, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரமைப்பு வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் மீதான நடவடிக்கையை, ஐகோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு தீவிரப்படுத்தியுள்ளது. இதில் முதல்கட்டமாக தி.நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில், விதிகளைமீறி கட்டப்பட்ட அடுக்குமாடி வணிகவளாகங்களை பூட்டி, சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளன.விதிமீறல் கட்டடங்களாக கண்டறியப்பட்ட வணிகவளாகங்கள் பலவும் போதிய அளவுக்கு வாகன நிறுத்துமிட வசதிகளை செய்யாமல் இருப்பது, அனுமதிக்கப்பட்ட தள பரப்புக் குறியீட்டைவிட பலமடங்கு அதிகமான அளவுக்கு கட்டடங்களை கட்டியது என, வகைபடுத்தப்படுகின்றன.இதிலும், சி.எம்.டி.ஏ.,வின் பழைய கட்டட விதிகள் மற்றும் இரண்டாவது மாஸ்டர் பிளானில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டடவிதிகள் என எதனுடனும் ஒத்துப்போகாமல், விதிமீறலில் ஈடுபட்ட கட்டடங்கள் மீதே இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 27ம் தேதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்ட 64 வணிகவளாகங்களை, முதல்கட்டமாக பூட்டி 'சீல்'வைப்பது என, அண்மையில் நடைபெற்ற கண்காணிப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், தி.நகரில் உள்ள சில வளாகங்களில் வாகன நிறுத்துமிடம் இல்லாததே முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.விதி என்ன?: சி.எம்.டி.ஏ., விதிகளின்படி, அடுக்குமாடி வணிகவளாகங்கள் கட்டும்போது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 50 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட கட்டடங்களில், ஒவ்வொரு 50 சதுர மீட்டருக்கும் ஒரு கார் மற்றும் ஒரு,'டூவீலர்' நிறுத்துமிடமும் கட்டாயம் இருக்க வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் இது 75 சதுர மீட்டருக்கு ஒன்று என மாறுபடும். குறிப்பாக, அந்தந்த வணிகவளாகம் கட்டப்படும் நிலத்திற்குள்ளேயே, இதற்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும்.இத்தகைய இடவசதிக்கான விவரங்களை அந்தந்த கட்டடங்களுக்கான வரைபடத்திலேயே குறிப்பிட்டால் தான், சி.எம்.டி.ஏ.,விடம் இருந்து திட்ட அனுமதி பெறமுடியும். சில நிறுவனங்கள் இத்தகைய வசதிகளுக்கான விவரங்களைத் தெரிவித்து, திட்ட அனுமதி பெறுகின்றன. ஆனால், இவ்வசதிகளை செய்யாமலேயே பணியை நிறைவு செய்துவிடுகின்றன. சில நிறுவனங்கள், சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதியும், மாநகராட்சியிடம் இருந்து கட்டட அனுமதியும் பெறாமல், தங்கள் விருப்பப்படி வணிகவளாகங்களை கட்டியுள்ளன. இத்தகைய கட்டடங்களை முழுவதுமாகவே இடித்து தள்ள நடவடிக்கை எடுக்க, கண்காணிப்புக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட் அதிகாரம் அளித்துள்ளது.ஏமாற்றும் வளாகங்கள்: வணிகவளாகங்களை சேர்ந்தவர்கள், அவை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் வேறுசிலருக்கு சொந்தமான காலி நிலங்கள் அல்லது கட்டடங்களை வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் வாங்கி, அவற்றை தங்கள் கட்டடத்துக்கான வாகன நிறுத்துமிடமாக கணக்குகாட்டி, சி.எம்.டி.ஏ.,வின் நடவடிக்கையை தவிர்க்கின்றனர். வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டிய தரைதளம் உள்ளிட்ட இடங்களையும், வணிக தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன.ஒரு குறிப்பிட்ட நிலத்தில் கட்டப்படும் கட்டடத்துக்கான வாகன நிறுத்துமிடங்களுக்காக ஒதுக்க வேண்டிய இடம், அதே நிலத்தில் தான் இருக்க வேண்டும். ஆனால், சி.எம்.டி.ஏ.,வின் வளர்ச்சி விதிகளில், வாகன நிறுத்துமிடத்தின் அளவு குறித்து மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகன நிறுத்துமிடம் எங்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடாததை சுட்டிக்காட்டி, வணிகவளாக உரிமையாளர்கள் தங்களது விதிமீறலை நியாயப்படுத்துகின்றனர். இதனை ஏற்று சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், அந்தந்த வளாகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கின்றனர்.இதில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுள்ளேயே இருவேறு கருத்து நிலவுகிறது. வாகனநிறுத்துமிடம் விடாமல் கட்டப்பட்ட வணிகவளாகங்களில், குறிப்பிட்ட சில தளங்களை வணிக பயன்பாட்டில் இருந்து விலக்கி, அவற்றை வாகனம் நிறுத்தும் இடங்களாக மாற்ற வேண்டும் என்று சி.எம்.டி.ஏ.,வின் ஒரு பிரிவு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.உதாரணமாக, உஸ்மான் சாலையில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்காமல் கட்டப்பட்ட ஒரு துணிக்கடை மீது, சில ஆண்டுகளுக்கு முன்னர் சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்தது. அப்போது அந்த வளாகத்தில் தரைதளம் மற்றும் முதல் தளத்தை சில பகுதிகளை இடித்து, வாகன நிறுத்தும் இடமாக மாற்ற உத்தரவிடப்பட்டதையும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.வணிகவளாகங்கள் அடுத்தவர் நிலத்தில், தங்கள் கட்டடத்துக்கான வாகனம் நிறுத்தும் இடங்களை கணக்குக் காட்டுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை, கண்காணிப்புக்குழு எடுக்குமா அல்லது இதை அனுமதிக்கும் வகையில், விதியில் திருத்தம் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.

பர்சை பழுக்க வைக்கும் 'பார்க்கிங்' கட்டணம் : சென்னையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட வணிக வளாகங்களில், வாகன நிறுத்துமிட வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கென வசூலிக்கப்படும் கட்டணம், அபரிதமாக உள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு, மணிக்கு 15 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. கார்களுக்கு முதல் மூன்று மணிநேரத்திற்கு 100 ரூபாய், அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில், முதல் மூன்று மணிக்கு 150 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 50 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது.இந்த வளாகங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் படம் பார்த்துவிட்டு வருபவர்கள், சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு இணையாகவும், சில சமயங்களில் அதை விட அதிகமாகவும் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், இத்தகைய வணிகவளாகங்களை அருகில் உள்ள சாலைகள், குறுக்குத் தெருக்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். வணிக வளாகங்கள் வசூலிக்கும் இந்த அபரிதமான கட்டணத்தை முறைப்படுத்துவதும் அவசியமாகிறது.

வி.கிருஷ்ணமூர்த்தி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us