Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/"சீட்' கிடைத்தும் பணம் இல்லாததால் கானல் நீரானது டாக்டர் படிப்பு!

"சீட்' கிடைத்தும் பணம் இல்லாததால் கானல் நீரானது டாக்டர் படிப்பு!

"சீட்' கிடைத்தும் பணம் இல்லாததால் கானல் நீரானது டாக்டர் படிப்பு!

"சீட்' கிடைத்தும் பணம் இல்லாததால் கானல் நீரானது டாக்டர் படிப்பு!

ADDED : ஜூலை 19, 2011 12:21 AM


Google News
Latest Tamil News
அரியலூர்: டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாததால், அரியலூர் அருகே, விவசாய கூலி தொழிலாளியின் மகன், விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல், 50. இவரது மனைவி லெட்சுமி, 45. விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல், 17, என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படித்த ராஜவேல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். கூலித் தொழிலாளி மகனான ராஜவேல், அதிக மார்க் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, நல்ல பள்ளியில் படிக்க வைத்தால், பிளஸ் 2வில் அதிக மார்க் பெறுவார் என, பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து, தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த வீட்டை விற்று, சேலம் மாவட்டம், வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனை சேர்த்து படிக்க வைத்தார்.

கிராமத்தில் இருந்த வீட்டை விற்று விட்ட தங்கவேல், தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார். ராகவேந்திரா பள்ளியில், பிளஸ் 2 படித்த ராஜவேல், 1,171 மார்க் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், சேலம் வருவாய் மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். ராஜவேலின் ஏழ்மை நிலையை உணர்ந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகிகள், அவரது மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். ராஜவேலின் மருத்துவ, 'கட் ஆப்' மதிப்பெண், 198.5. டாக்டர் படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு சென்ற ராஜவேலுக்கு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய பிளஸ் 2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் படிப்புக்கு பணம் கட்ட முடியாமல் திணறி வருகிறார். அதனால், தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். மாணவன் ராஜவேலுவின் கல்வி கட்டணத்தை ஏற்க முன்வருவோர், தங்கவேலுவின் மொபைல்போன் எண் 95852 68053க்கு தொடர்பு கொள்ளலாம்.

மகனை போல் மகளும் சாதனை : செந்துறை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த தங்கவேல் மகள் சுபாஷினியும், கடந்த கல்வி ஆண்டில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 485 மார்க் பெற்று அரியலூர் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இதையறிந்த வீரகனூர் ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், மாணவி சுபாஷினியை எந்தவித கல்வி கட்டணமும் இல்லாமலேயே, பள்ளியில் சேர்த்துக்கொண்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us