ரம்ஜான் மாதத்திலும் அடங்காத சிரியா: கண்டுகொள்ளாத அரபு நாடுகள்
ரம்ஜான் மாதத்திலும் அடங்காத சிரியா: கண்டுகொள்ளாத அரபு நாடுகள்
ரம்ஜான் மாதத்திலும் அடங்காத சிரியா: கண்டுகொள்ளாத அரபு நாடுகள்
டமாஸ்கஸ்: சிரியாவில், அதிபர் அசாத்துக்கு எதிரான மக்களின் அமைதி ஆர்ப்பாட்டங்கள், பீரங்கிகள் மூலம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்றன.
டுனீஷியா, எகிப்தை அடுத்து, சிரியாவில் கடந்த மார்ச் 15ம் தேதி முதல், அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக, மக்கள் போராட்டங்கள் துவங்கின. இப்போராட்டங்களில் இதுவரை, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,000 பேர் காணாமல் போய்விட்டனர். 12 ஆயிரம் பேர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த வார இறுதி முதல் மீண்டும், அந்நாட்டின் பல நகரங்களில் அதிபருக்கு எதிராக, மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் துவங்கினர். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் துவக்க நாளான நேற்று முன்தினம், ஹமா நகரில் தொழுகை முடித்த பின், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்காக, அங்கு ராணுவ பீரங்கிகள் குவிக்கப்பட்டன. கண்மூடித் தனமாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த இரு நாட்களில் மட்டும், 140 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஹமா நகரின் மையத்தை நோக்கி பீரங்கிகள் நகரத் துவங்கியதால், நகரில் இருந்து மக்கள், கும்பல் கும்பலாக வெளியேறி, பக்கத்து கிராமங்களில் அடைக்கலம் புகுந்தனர்.
ரஷ்யா எதிர்ப்பு: 'சிரிய அதிபர் தன் பதவியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டார். சிரியா மீது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று கேட்டுக் கொண்டார். நேற்று கூடிய ஐ.நா., பாதுகாப்பு சபையில், சிரியா மீதான கண்டனத் தீர்மானத்திற்கு, ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா தலைமைப் பொறுப்பேற்றுள்ளது. இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில்,'சிரியாவில் வன்முறை நடக்கிறது என்ற சிந்தனை அதிகரித்துள்ளதை நான் காண்கிறேன்' என்றார்.
அரபு நாடுகள் மவுனம்: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் துவக்கத்தில் கூட, சிரிய அதிபர் தன் மக்களை கொன்று குவிப்பதைக் கண்டும், அரபு நாடுகள் மவுனம் சாதித்து வருகின்றன. இது, அப்பகுதி மக்களிடையே சீற்றத்தைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து எகிப்து எதிர்க்கட்சித் தலைவர் முகமது எல்பரேடி 'ட்விட்டரில்' அனுப்பிய செய்தி ஒன்றில்,'சிரியாவில் நடக்கும் மனிதப் படுகொலையை உலகம் வேடிக்கை பார்க்கிறது. இது ஒவ்வொரு அராபியனுக்கும், மனிதனுக்கும் வெட்கக் கேடு' என்று குறிப்பிட்டுள்ளார்.