2ஜி' ஊழல்: உண்மையான இழப்பு எவ்வளவு?
2ஜி' ஊழல்: உண்மையான இழப்பு எவ்வளவு?
2ஜி' ஊழல்: உண்மையான இழப்பு எவ்வளவு?

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான வாதம், கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் பெகுரா, ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகியோர், ஏற்கனவே தங்கள் தரப்பு வாதங்களை தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா, நேற்று, தனது தரப்பு வாதத்தை கோர்ட்டில் எடுத்து வைத்தார்.
ஷாகித் பல்வா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, அவரது வழக்கறிஞர் மஜீத் மேமன், கோர்ட்டில் நேற்று கூறியதாவது:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில், அரசுக்கு உண்மையில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில் தான், சி.பி.ஐ., இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.ஆனால், அரசுத் தரப்பிலோ, இதனால் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக, பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும், சி.பி.ஐ., கடிதம் எழுத வேண்டும். இழப்பு குறித்து, அவர்கள் தெரிவிக்கும் விவரத்தை, கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். யூகத்தின் அடிப்படையில், இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அதை அடிப்படையாக வைத்து, வழக்கு பதிவு செய்வதை ஏற்க முடியாது.'யுனிபைடு அக்சஸ் சர்வீஸ்' உரிமம் பெறுவதற்கு, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஏன் தகுதி இல்லை என்பதை, சி.பி.ஐ., தெரிவிக்க வேண்டும்.
இந்த வழக்கில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மீது மட்டுமே, சி.பி.ஐ., நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில், சி.பி.ஐ., பாரபட்சமாகச் செயல்படுகிறது.தே.ஜ., கூட்டணி ஆட்சியில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், பின்பற்றிய கொள்கையைத் தான், ராஜாவும் பின்பற்றினார். அப்படி இருக்கும்போது, ராஜா மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது ஏன்?ஷாகித் பல்வாவின் தொழில் எதிரிகளால் தான், அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஷாகித் பல்வா, வெற்றிகரமான தொழிலதிபர். அதனால், அவரது தொழில் எதிரிகள் செய்த சதி காரணமாக, அவர் இந்த பிரச்னையில் சிக்கியுள்ளார்.2004-2007 வரையிலான காலகட்டங்களில், ஏர்டெல், டாடா, வொடாபோன் ஆகிய நிறுவனங்கள், 2001ம் ஆண்டு விலைக்கு, உரிமங்கள் பெற்றுள்ளன. இதற்கெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், ஷாகித் பல்வா மீது மட்டும், புகார் கூறுகின்றனர். 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலை தான், 2008 வரை பின்பற்றப்பட்டது.இவ்வாறு ஷாகித் பல்வா சார்பில், அவரது வழக்கறிஞர் மேமன் வாதாடினார்.