Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/காதை செவிடாக்கும் "ஏர் ஹாரன்'க்கு தடை வருமா?

காதை செவிடாக்கும் "ஏர் ஹாரன்'க்கு தடை வருமா?

காதை செவிடாக்கும் "ஏர் ஹாரன்'க்கு தடை வருமா?

காதை செவிடாக்கும் "ஏர் ஹாரன்'க்கு தடை வருமா?

ADDED : ஜூலை 21, 2011 12:53 AM


Google News
பஸ், லாரி,வேன் மற்றும் கார் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்படும் 'ஏர் ஹாரன்'களுக்கு, போக்குவரத்து அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ், வேன், கார்கள் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளில் சாலையில் செல்லும் வாகனங்கள் வழிவிடவும், எதிரே வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடவும் 'ஏர் ஹாரன்' கள் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.இவை எழுப்பும் சத்தம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக குறுகிய இடங்களில் இயங்கும் திருவள்ளூர், திருத்தணி போன்ற பஸ் நிலையங்களில் நெரிசல் ஏற்படும் போது வழி விட வேண்டி, பஸ் டிரைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு 'ஏர் ஹாரன்' அடித்து பயங்கர சத்தத்தை எழுப்புகின்றனர்.காதை செவிடாக்கும் பயங்கர சத்தத்தினால், பஸ் பயணிகள் அலறி அடித்து கொண்டு ஒதுங்கி செல்கின்றனர்.சாலையில் செல்லும் மணல் லாரிகள், டேங்கர் லாரிகள் அசுர வேகத்தில் செல்லும் போது, சாலையின் குறுக்கே யாரும் வராமல் இருக்க 'ஏர் ஹாரன்களை' தொடர்ந்து ஒலித்துக் கொண்டே செல்கின்றன.மேலும், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் 'ஹாரன்' சத்தத்தால் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது.திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு போன்ற இடங்களில் சாலையோரத்தில் உள்ள மருத்துவமனைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், கோர்ட் வளாகங்கள் ஆகியவற்றில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக, நோயாளிகளுக்கு ஏர் ஹாரன்களால் அதிர்ச்சி ஏற்படுகிறது. அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தொடர்ந்து எழுப்பப்படும் சத்தத்தால் பணி செய்வது தடைபடுகிறது.இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் கூறும்போது, ''வாகனங்களில், அதிகபட்சமாக 75 டெசிபல் சத்தம் ஒலிக்கலாம்.அதற்கு மேல் யாரும் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களில் 'ஏர் ஹாரன்' பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.இருந்தாலும், பெரும்பாலான வாகனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. அந்த வாகனங்கள் தகுதி சான்றிதழ் பெற வரும்போது 'ஏர் ஹாரன்'களை கழற்றி விடுகிறோம். அடிக்கடி வாகன சோதனைக்கு செல்லும் போதும் 'ஏர் ஹாரன்' இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விடுகிறோம்.

இவ்வார இறுதியில், திருத்தணியில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழாவில், திருத்தணி நகருக்குள் வரும் வாகனங்களில் 'ஏர் ஹாரன்' இருந்தால் அவைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.இதேபோல, மாவட்ட அளவில் பஸ் நிலையம் மற்றும் நகரங்களில் திடீர் சோதனையிட்டு, வாகனங்களில் உள்ள 'ஏர் ஹாரன்'கள் அகற்றப்படும்'' என்றார்.

எம்.டி.கணபதி / பள்ளிப்பட்டு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us