Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கள்ளச் சந்தை தடுப்புச் சட்டம் மில் அதிபர்கள் மனு தள்ளுபடி

கள்ளச் சந்தை தடுப்புச் சட்டம் மில் அதிபர்கள் மனு தள்ளுபடி

கள்ளச் சந்தை தடுப்புச் சட்டம் மில் அதிபர்கள் மனு தள்ளுபடி

கள்ளச் சந்தை தடுப்புச் சட்டம் மில் அதிபர்கள் மனு தள்ளுபடி

ADDED : ஆக 14, 2011 02:19 AM


Google News

சென்னை : கள்ளச் சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, மில் அதிபர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல்லில், அரிசி ஆலை நடத்தி வருபவர் முகமது சித்திக். அரிசி மில் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலராகவும் உள்ளார். பொது வினியோகத்துக்காக உள்ள, 188 மூட்டை அரிசியை, இவரது கிட்டங்கியில் வைத்திருந்ததாக, கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம், திண்டுக்கல் சிவில் சப்ளைஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, இவரை கைது செய்தார். பின், ஜாமினில் வெளியே வந்தார். இதையடுத்து, கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யக் கூடும் என்பதால், அதற்குத் தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட்டில் முகமது சித்திக் மனு தாக்கல் செய்தார். இதே போன்று, கள்ளக்குறிச்சியில் மில் நடத்தும் கொளஞ்சி சார்பில், அவரின் மனைவி ஆண்டாள், விஸ்வநாதன் என்பவர் சார்பில், அவரின் சகோதரர் கொற்றவேல், கண்ணன் என்பவர் சார்பில், அவரின் உறவினர் தனசேகரன் ஆகியோரும், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.



அரசுத் தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், 'அனுமானத்தின் அடிப்படையில், மனுதாரர்கள் நிவாரணம் கோருகின்றனர். சட்டத்தை மீறுபவர்களைக் காவலில் வைக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம். இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல' என, வாதாடினார்.



மனுக்களை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: அனுமானத்தின் அடிப்படையில், கள்ளச் சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, மனுதாரர்கள் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். முகாந்திரம் இருந்தால், ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு, அரசுக்கு அதிகாரம் உள்ளது. அத்தகைய உத்தரவு பிறப்பிப்பது என்பது, அதிகாரிகள் திருப்தியின் அடிப்படையிலானது. காவலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அதை எதிர்த்து வழக்கு தொடுக்கலாம். அதற்கு முன்கூட்டியே, வழக்கு தொடர முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us