காதலர்களின் புகலிடமான கலெக்டர் ஆஃபீஸ்
காதலர்களின் புகலிடமான கலெக்டர் ஆஃபீஸ்
காதலர்களின் புகலிடமான கலெக்டர் ஆஃபீஸ்
ADDED : செப் 22, 2011 01:56 AM
சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பாதுகாப்பு கேட்டு ஓடி வரும்
காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி உள்ளது. போலீஸ் ஸ்டேஷனுக்கு
செல்லாமல், கலெக்டரை தேடி வருவதால், அவரும் ஆதரவுக்கரம்
நீட்டுகிறார்.பல்வேறு பிரச்னைகளை களையவும், குறைகளை தீர்க்கவும், அலுவல்
பணியாகவும், நூற்றுக்கணக்கானோர், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு
நாள்தோறும் வருகின்றனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் செய்யும் ஜோடிகள்,
ஏதாவது கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று
தஞ்சமடைவர்.போலீஸார், பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து, ஜோடிகளை ஒன்றாக
அனுப்பி வைப்பர். தற்போது, காதல் மணம் புரியும் ஜோடிகள், கலெக்டர்
அலுவலகத்தை நாடி வருவது அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், சேலம்
சின்னகொல்லப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர், அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யா
இருவரும், கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்து, பாதுகாப்பு கேட்டு மனு
அளித்தனர்.அவர், சமூக நலத்துறை அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கூறிய நிலையில்,
பெண் வீட்டு தரப்பினர், கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து, வாலிபரை
தாக்கி, பெண்ணை தூக்கிச் சென்றனர்.
மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனரை
தொடர்பு கொண்டு, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும்,
காதல் ஜோடி பிரச்னையை தீர்த்து வைக்குமாறும் அறிவுறுத்தினார்.இந்த
நிலையில், சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த தேவராஜ்(22),
சிவகங்கையைச் சேர்ந்த முகம்மது உன்னிஷா(19) என்ற காதல் ஜோடி, மாவட்ட
கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்து. மொபைலில், மிஸ்டு கால் மூலம் தங்கள் காதல்
மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொண்டு, சார்பதிவாளர்
அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என,
கேட்டனர். அவர்களது குடும்ப விபரங்களை கேட்ட கலெக்டர், போலீஸ் துணை கமிஷனர்
சத்யபிரியாவை அழைத்து, அவர்களுடைய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு
அனுப்பி வைத்தார்.போலீஸை நம்பி பிரயோஜனமில்லை என, கலெக்டர் அலுவலகத்தை நாடி
வரும் காதல் ஜோடிகளுக்கு, கலெக்டரும் ஆதரவுக்கரம் நீட்டுவதால், மாவட்ட
கலெக்டர் அலுவலகத்தில், இனி காதலர் கூட்டம் களைகட்டினாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.