Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கட்சிக்காரர்களை போலீஸார் மதிப்பதில்லை: அ.தி.மு.க., நகர செயலாளர் "பகிரங்க' பேச்சு

கட்சிக்காரர்களை போலீஸார் மதிப்பதில்லை: அ.தி.மு.க., நகர செயலாளர் "பகிரங்க' பேச்சு

கட்சிக்காரர்களை போலீஸார் மதிப்பதில்லை: அ.தி.மு.க., நகர செயலாளர் "பகிரங்க' பேச்சு

கட்சிக்காரர்களை போலீஸார் மதிப்பதில்லை: அ.தி.மு.க., நகர செயலாளர் "பகிரங்க' பேச்சு

ADDED : ஆக 15, 2011 02:30 AM


Google News
பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க., கட்சிக்காரர்களை, போலீஸார் யாரும் மதிப்பதில்லை என, எம்.எல்.ஏ., முன்னிலையில், நகர செயலாளர் பகிரங்கமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மல்லூரில், அ.தி.மு.க., அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. பனமரத்துப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஏழுமலை, மாவட்ட மாணவர் பிரிவு செயலாளர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியினரை வரவேற்று, மல்லூர் நகர அ.தி.மு.க., செயலாளர் கண்மணி பேசியதாவது: தமிழகத்தில், நல்லாட்சி நடந்து வரும் நிலையில், கட்சிக்காரர்களை போலீஸார் யாரும் மதிப்பதில்லை. நியாயமான வேலைக்கு ஸ்டேஷனுக்கு சென்றால் கூட, போலீஸார் உட்காரகூட சொல்வதில்லை. ஸ்டேஷனுக்கு செல்லும் பொதுமக்களுக்கும் போலீஸார் மரியாதை கொடுப்பதில்லை. தி.மு.க.,வினர் ஃபோனில் சொல்கின்ற வேலைகளை, போலீஸார் செய்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் தி.மு.க.,வினர் சேரை இழுத்து போட்டு அமர்ந்துகொள்கின்றனர். அ.தி.மு.க.,வினர் பலமுறை நேரில் முறையிட்டலும், போலீஸார் கண்டுகொள்வதில்லை. நாங்கள் சொல்லும் பிரச்னை நியாயமானதாக இருந்தால் செய்து கொடுங்கள், தவறாக இருந்தால் கட்சி மேலிடத்தில் புகார் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். பொதுக்கூட்ட மேடையில் இருந்த எம்.எல்.ஏ., செல்வம், போலீஸார் பற்றி பேசவேண்டாம் என, கேட்டுக்கொண்டதால், மேற்கொண்டு பேசாமல் நகர செயலாளர் கண்மணி அமர்ந்துகொண்டார். வீரபாண்டி எம்.எல்.ஏ., செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி பெறுப்பேற்றவுடன், ஏழைகளுக்கு ஏழு திட்டங்களை உடனே நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டார். அ.தி.மு.க., கட்சியினர், சேர்மன், பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிக்கு வந்தால், அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கு கிடைக்கும்படி செய்ய முடியும். எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை, மக்கள் பயன்பெறும் வகையில், உள்ளாட்சிகள் மூலம் சிறப்பாக செலவிட முடியும். அதனால், உள்ளாட்சி தேர்தலில் முனைப்புடன் செயல்பட்டு, பஞ், தலைவர், சேர்மன் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட மகளிர் அணி தலைவர் தேவகி, மல்லூர் துர்கா தங்கவேல், அம்மா பேரவை செயலாளர் செல்வராஜ், ஜெகநாதன், பனமரத்துப்பட்டி நகர செயலாளர் சின்னதம்பி, மகளிர் அணி செயலாளர் ரத்தனாம்பாள் ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கட்சி பொதுக்கூட்டத்தில், தொகுதி எம்.எல்.ஏ., முன்னிலையில், போலீஸாரை பற்றி அ.தி.மு.க., நகர செயலாளர் பேசியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us