கடந்து வந்த பாதை: திரைப்பட இயக்குநர் முத்துராமன்
கடந்து வந்த பாதை: திரைப்பட இயக்குநர் முத்துராமன்
கடந்து வந்த பாதை: திரைப்பட இயக்குநர் முத்துராமன்
ADDED : ஜூலை 12, 2011 04:42 PM

சென்னை: வெற்றி என்பது உங்களுக்குள் இருக்கிறது; யாருக்காவும் உங்கள் கனவுகளைப் பலியிட்டு விடாதீர்.
கடுமையாக உழைத்தால் மட்டுமே உங்கள் லட்சியத்தை எட்ட முடியும் என்று பிரபல திரைப்பட இயக்கநர் எஸ்பி. முத்துராமன் கூறினார். நீலாங்கரையில் உள்ள ஊடகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே ஒரு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், நான் 10ம் வகுப்பு முடித்தவுடன் பெரிய கனவுகளுடன் திரைப்பட உஙகிற்கு வந்தேன். ஏவிஎம். ஸ்டுடியோவில் எடிட்டிங் துறையில் பணிக்குச் சேர்ந்தேன். வெற்றி என்பது உங்களுக்குள்தான் இருக்கிறது.
கலைஞர்களாகிய நாம் சாதாரண எழுத்தர் வேலையைச் செய்யவில்லை. புதிதாக எதையாவது படைக்கிறோம். ஆகவே எத்தகைய சூழ்நிலைக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். உங்கள் கனவுகளை எப்போதும் கைவிட்டு விடாதீர்கள். அதை நனவாக்க கடுமையாக உழையுங்கள். உங்களைத் தேடி வெற்றி வரும். பராசக்தியில் நடிப்பதற்காக சிவாஜி 3 மாதம் காத்திருந்து தனது எடையை அதிகரித்த பிறகே நடிக்க முடிந்தது. அதேபோல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், இடையில் சிறிது காலம் நடன ஆசிரியராக பணியாற்ற வேண்டி இருந்தது. இளையராஜா இசை அமைத்த முதல் பாடல் பதிவு நாளன்று மின்சாரம் தடைபட்டது; அவருக்கு எதிர்காலம் அவ்வளவுதான் என்று எல்லாரும் நினைத்தனர். ஆனால் அவருடைய இன்றைய நிலை என்ன?
எனவே உங்கள் பணியை நேசியுங்கள். நான் படம் இயக்கும்போது, அது வெளியாகி, ரசிகர்களின் கருத்தை அறியும் வரை தூங்க மாட்டேன். இந்த வயதிலும் என்னால் முடியும் என்றால், இளையவர்களாகிய உங்களால் ஏன் முடியாது? திட்டமிட்டு உங்கள் பணியைச் செய்யுங்கள். நேரம்தான் வாழ்க்கை; அது போனால் வராது; எனவே அதைச் சரியாக பயன்படுத்துங்கள் என்றார்.


