Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வீதிக்கு வந்த மாணவர்கள்!பஸ் வசதி கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

வீதிக்கு வந்த மாணவர்கள்!பஸ் வசதி கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

வீதிக்கு வந்த மாணவர்கள்!பஸ் வசதி கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

வீதிக்கு வந்த மாணவர்கள்!பஸ் வசதி கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

ADDED : ஜூலை 13, 2011 11:50 PM


Google News
தர்மபுரி: தர்மபுரி அருகே பஸ் வசதி கேட்டு 10க்கும் மேற்பட்ட கிராம மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மலைகள் சூழ்ந்த தர்மபுரி மாவட்டத்தில் அதிக கிராம பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு பஸ் வசதியில்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போதிய சாலை வசதி இருந்தும் போக்குவரத்து பஸ்கள் இயக்கப்படாததால், இன்று வரையில் பல்வேறு கிராம மக்கள் கால்நடையாக இணைப்பு பிரிவு சாலைகளுக்கு வந்து பஸ் ஏறி செல்லும் நிலையுள்ளது. கிராம பகுதிகளில் போதிய பஸ் வசதியில்லாததால், சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்வதும், இதனால் பல நேரங்களில் விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியில் இருந்து 15வது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மருக்காரம்பட்டி கிராமம். இக்கிராமத்துக்கு இடைப்பட்ட பகுதிகளில் ஆற்றுப்பள்ளம், திகிலோடு மலையனூர், நாவனம்பட்டி, எழுமந்தை, காந்திநகர், பவளந்தூர், தாசம்பட்டி, கோடுப்பட்டி, திருமலை நகர் ஆகிய கிராம பகுதிகள் உள்ளன. இக்கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இக்கிராமங்களில் வசித்து வருகின்றனர். விவசாய விளை பொருட்களையும், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இக்கிராம மக்கள் அருகில் உள்ள பாப்பாரப்பட்டி கிராமத்துக்கு வந்து செல்ல வேண்டும். அதே போல் இக்கிராமங்களில் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. உயர் கல்விக்கு இக்கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் பாப்பாரப்பட்டிக்கு வந்து செல்ல வேண்டும்.

இக்கிராம மக்கள் கடந்த இரு ஆண்டுக்கு முன் வரையில் நடைபயணமாக 15 கிலோ மீட்டர் பென்னாகரம், பாப்பாரப்பட்டி மெயின் ரோடு இணைப்பு சாலைக்கு வந்து பஸ் பிடித்து தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்று வந்தனர். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இரு சக்கர வாகனங்களில் எடுத்து வந்து சந்தைகளில் விற்பனை செய்து வந்தனர். இதனால், விவசாயிகளுக்கு விளை பொருட்களை விற்பனை செய்ய போக்குவரத்து செலவு கையை பிடிப்பது வழக்கமாக உள்ளது. பாப்பாரப்பட்டியில் இருந்து மருக்காரம்பட்டி வரையான சாலை வசதிகள் இருந்தும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல், இக்கிராம மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த இரு ஆண்டுக்கு முன் இக்கிராமத்துக்கு அரசு டவுன் பஸ் எண் 4 இயக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு மருக்காரம்பட்டியில் இருந்து கிளம்பும் இந்த பஸ்ஸை பிடித்து வழியில் உள்ள 10 கிராம பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாப்பாரபட்டி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும். காலை 7 மணிக்கு பஸ்ஸை தவற விட்டால் அதற்கு பின் பஸ் இல்லை. பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்வதால், காலை நேரத்தில் மாணவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்க முடியாத நிலையில் பல மாணவர்கள் காலை நேரத்தில் சாப்பிடாமல், மதியம் பள்ளிக்கு வந்து சத்துணவு சாப்பிட்டு படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் மாலையில் பாப்பாரப்பட்டியில் இருந்து மருக்காரம்பட்டிக்கு மாலை 5.30 மணிக்கு பஸ் உள்ளது. இந்த பஸ்ஸை தவற விட்டால், இரவு 11 மணிக்கு தான் பஸ் உண்டு. இதனால், டியூசன் மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் நடந்தால், இரவு 11 மணி பஸ்ஸை பிடித்து ஊருக்கு செல்லும் நிலையுள்ளது. கூடுதல் பஸ் வசதி கேட்டு மருக்காரம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல மனுக்கள் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கொதிப்படைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். கலெக்டர் பல்வேறு அலுவல் காரணமாக வெளியூர் சென்றதால், காலையில் இருந்து மதியம் வரையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் இருந்து மனு கொடுத்து சென்றனர். மாணவர்களின் நியமான கோரிக்கை ஏற்று காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us