பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள, படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன?...
பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள, படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன?...
பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள, படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன?...

மூங்கில் விட்டு சென்ற பின்னே, அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன?...
அபியும், நானும் படத்துல ரகுராமனுக்கு கிடைச்ச மாதிரியே, டாக்டர், சந்திரமோகனுக்கும், மகள்களோட பிரிவை தாங்கிக்கிற பக்குவம் கிடைச்சிடுச்சாம்.
வரலாறு: 1957ல் தஞ்சாவூரில் ஜனனம். தந்தையின் விருப்பத்தின் பேரில் 1974ல் தஞ்சை மருத்துவக்கல்லூரி நோக்கி பயணம். 30 வருட மருத்துவ சேவை. தற்போது.. வருங்கால மருத்துவர்களுக்கு கற்பித்தல். உணவுக்குழாய் பிரச்சனை சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் என அர்த்தமுள்ளதாக ஆரோக்கியமாக குணமடைந்தவர்களின் வாழ்த்துகறோடு தொடர்கிறது டாக்டர் சந்திரமோகனின் மருத்துவப் பயணம்.
மின்னல் கேள்விகள்.... மின்னும் பதில்கள்...
ஒரு மருத்துவம் கடவுளை ஜெயிக்கும் இடம் எது?
சிகிச்சைக்கு பின், நலமோடு வீடு திரும்பியவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. ஆனால் உயிர் பிரியும் நேரத்தில் சிகிச்சை பெற்றவர்கள் இன்று உற்சாகமாக உலவிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும் கடவுள்தான் மருத்துவர்களை ஜெயிக்கிறார்.
இது வரை உங்களுக்கு கிடைத்ததில் மிகப்பெரிய வாழ்த்து எது? யாரிடமிருந்து?
முருகேசன் பையனா நீ! பெருமையா இருக்குப்பா! என் தந்தைக்கு மரியாதை தந்த வாழ்த்து இது. என்னிடம் என் ஊர்க்காரர்கள் சொன்னது.
குடும்ப உறவுகள் தவிர்த்து ஒரு சுற்றுலா...யாரை அழைத்து செல்வீர்கள்?
உங்களின் கோபத்தால் சந்தித்த இழப்புகள்?
பட்டியலிட்டால் ஒரு பக்கம் தாங்காது. கோபம் கொடுத்த இழப்புகளால் தான் இன்று பக்குவப்பட்டிருக்கிறேன். கோபத்தை தொலைத்திருக்கிறேன். இனி, கோபம் என்னிடம் சாதிப்பது சாத்தியமில்லை.
தமிழ் சினிமா - உங்களின் கருத்து?
சந்தோஷம் தரும் முடிவு என்பதற்காகவே பாட்ஷா படத்தை 50 முறை பார்த்தவன் நான்! ஒரே நேரத்தில் சர்வசாதாரணமாக 50 பேரை பந்தாடும் நாயகர்கள் நிறைந்த தமிழ் சினிமாவின் ரசிகன் நான்.
இந்த மருத்துவ தொழில் உங்களுக்கு சொல்லி கொடுத்த வாழ்க்கை பாடம் என்ன?
சாதாரண வயிற்று வலி தான்னு நம்பிட்டு வர்ற நோயாளிக்கு புற்றுநோய் பாதிப்பிருக்கு. தனக்கு புற்று நோய் இருக்குமோன்னு வருத்தப்பட்டு வர்றவன்கிட்ட உனக்கு சாதாரண வயித்துவலி தான்னு சொல்லவேண்டி இருக்கு. ஆக, எதுவும் நிரந்தரமில்லைன்னு கத்துக்கொடுத்தது இந்த தொழில்.எந்த சூழல்ல இருந்தாலும், மனசு நிறைய கஷ்டத்தோட வர்ற நோயாளிகள்கிட்ட சிரிச்சு பேசனுங்கற கடமை மூலமா என்கிட்ட இருந்த கோபத்தை ஒழிச்சது இந்த தொழில். உயிருகு“கும் உயிருள்ள விஷயங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கணுங்கற வாழ்க்கை தத்துவத்தை கத்துக்கொடுத்தது இந்த தொழில். இந்த சந்திரமோகன் சிறகடிக்கும் பறவை. இந்த பக்குவத்தை கொடுத்ததும் இந்த தொழில்.
காதல் அறிவு சம்பந்தப்பட்டதா? மனசு சம்பந்தப்பட்டதா?
பணத்தையோ, அழகையோ பார்த்து வராத காதல் எல்லாமே மனசு சம்பந்தப்பட்டது தான். எனக்கு நடந்தது காதல் திருமணம். என் மனைவியும் ஒரு டாக்டர். நோயாளிகள் உட்பட சகமனிதர்களோட அவங்க பழகின விதம் தான் அவங்ககிட்ட என் காதலை சொல்ல காரணமா இருந்துச்சு. மனசை பார்த்து வந்த காதல்ங்கறதாலே திருமணம் நல்ல படியா முடிஞ்சது. இந்த நிமிஷம் வரைக்கும் கணவன், மனைவி போர்வையில காதலர்களாகத்தான் இருக்கறோம். எங்க அன்புக்கு சாட்சி... அஸ்மிதா, அப்சரா.
எந்தெந்த விஷயங்களில் பெண்கள் பரிதாபத்திற்குரியவர்கள்? பாராட்டுக்குரியவர்கள்?
பரிதாபமா? சிரிக்கிறார்... தனக்கு எல்லாம் கொடுக்கற கடவுளை பரிதாபத்தோட பார்க்குறது பக்தனோட தப்பு. ஆமாங்க. பெண் மூலமாத்தான் மனுஷனோட பிறப்புன்னு ஆண்டவன் முடிவு பண்ணினது ஏன் தெரியுமா? அவன் கடவுளோட அம்சம். அதனாலதான். தன்னுடைய தேவைகளையும் நிறைவேத்திட்டு, ஒரு தாயா, மனைவியா, சகோதரியா, தோழியா இருந்து நம்ம தேவைகளையும், நிறைவேத்த முடியுது. பெண்ணை சக்தின்னு சொல்றதும் இதனால தான். இன்னைக்கு பெண்கள் வேலைக்கு போறதனால தலைநிமிந்து, நின்ற குடும்பங்கள் நிறைய இருக்கு. உண்மையை சொல்லணும்னா, பாராட்டுக்குரிய பெண்கள் மத்தியில பரிதாபத்திற்குரியவர்கள் ஆண்கள் தான்.
மீண்டும் ஒரு பிறவி ஆசை உண்டா?
எந்த நேரமும் என்னை மனசுல சுமந்துட்டு இருக்கற இதே அம்மா தனபாக்கியம். இதே மனைவி, இதே குழந்தைகள், இதே மருத்துவ தொழில்.. இத்தனையும் சாத்தியம்னா, நிச்சயம் இன்னொரு பிறவி வேணும்னு ஆசையா தான் இருக்கு. ஒண்ணு தெரியுமா? ராத்திரி நான் வீட்டுக்கு போறதுக்கு எவ்வளவு தாமதமானாலும் அத்தனைபேரும் எனக்காக முழிச்சுட்டு இருப்பாங்க. பாசம்... எத்தனை பிறவிஎடுத்தாலும் இந்த சந்தோஷம் எனக்கு வேணும்.
-துரைகோபால்.