மாஜி மண்டல தலைவர் சின்னான் குடும்பம் மீது வழக்குப்பதிவு
மாஜி மண்டல தலைவர் சின்னான் குடும்பம் மீது வழக்குப்பதிவு
மாஜி மண்டல தலைவர் சின்னான் குடும்பம் மீது வழக்குப்பதிவு
ADDED : செப் 06, 2011 11:54 PM
மதுரை: மதுரையில் இடஆக்கிரமிப்பு செய்ததாக மாநகராட்சி முன்னாள் மேற்கு மண்டல தி.மு.க., தலைவர் சின்னான் குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகன் செந்தமிழ்ச் செல்வனை கைது செய்தனர்.
மதுரை நரிமேட்டைச் சேர்ந்தவர் ஹென்றி பேசிங்கர்.
1996ல் பைபாஸ் ரோடு அருள்நகரில் மனைவி கலாவள்ளி சாரதா பெயரில் பிளாட் ஒன்றை வாங்கினார். இவர் மறைவுக்கு பின், 2007ல் மகன் சேத்டேனிராஜ், அந்த இடத்தை பார்வையிட்ட போது, வேலிகள் அகற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பின், மீண்டும் வேலி அமைத்த டேனிராஜ், ஒருவாரம் கழித்து இடத்தை பார்வையிட வந்தார். அப்போதும் வேலி அகற்றப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தை கரிமேடு முரட்டன்பத்திரியைச் சேர்ந்த மாநகராட்சி முன்னாள் மேற்கு மண்டல தி.மு.க., தலைவர் சின்னான் (தற்போது 27வது வார்டு கவுன்சிலர்) குடும்பம் ஆக்கிரமித்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் டேனிராஜ் கேட்டபோது, ராமச்சந்திரன் என்பவரிடம் இடத்தை வாங்கியதாக கூறி மிரட்டினர். சின்னான், மனைவி பாக்கியம், மகன் செந்தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன் மற்றும் சிலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் டேனிராஜ் புகார் செய்தார். இந்திய தண்டனை சட்டம் 420(மோசடி), 471 (பொய்யான ஆவணத்தை உண்மை என கூறுதல்), 468(ஏமாற்றுநோக்கில் பொய் ஆவணம் தயாரித்தல்), 465( பொய் ஆவணம் தயாரித்தல்), 447(அத்துமீறல்), 427(வேலிகளை அகற்றியது), 506/2(கொலை மிரட்டல்), 120/பி(கூட்டுசதி) ஆகிய பிரிவுகளின்கீழ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, வக்கீலாக உள்ள செந்தமிழ்ச்செல்வனை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.