Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சுதந்திர போருக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி

சுதந்திர போருக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி

சுதந்திர போருக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி

சுதந்திர போருக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி

ADDED : ஆக 15, 2011 02:06 AM


Google News
கி.பி., 1806ம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி தான் இந்திய நாட்டின் முதல் சுதந்திரப்போருக்கு முன்னேடியாக விளங்கியது. கி.பி., 1760ம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் வேலூர் மாவட்டம் ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் நடந்த போரில் பிரிட்டிஷ்காரர்கள் வெற்றி பெற்றனர். பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து ஹைதர் அலி கி.பி., 1782ம் ஆண்டு வேலூர் அடுத்த கண்ணமங்கலத்தில் நடத்திய போரின் போது, அவர் நோய் வாய்ப்பட்டு இறந்தார். ஹைதர் அலிக்கு பின் அவரது மகன் திப்பு சுல்தான் மட்டுமே தென்னகத்தில் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து வந்தார். கடந்த 1801ம் ஆண்டு வட ஆற்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் கொண்ட சென்னை மாகாணம் அமைக்கப்பட்டது. நாட்டில் இருந்த ஜமீன்தாரர்கள், பாளையக்காரர்கள் ஆகியோரிடையே பிரிட்டிஷ்காரர்கள் மீது பகை வளர்ந்தது. இந்த நேரத்தில் திப்புசுல்தானின் குடும்பத்தினர், அவரது வேலையாட்கள் என 10 ஆயிரத்து 200 பேர் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டு, அங்கிருந்த திப்பு மஹால், ஹைதர் அலி மஹாலில் அடைக்கப்பட்டனர். கடந்த 1806ம் ஆண்டு மதராஸ் படைக்கு முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்ட சர் ஜான் கிரடேக் என்பவர் ராணுவ வீரர்களிடம் பல விதிமுறைகளைப் புகுத்தினார். ராணுவ அணி வகுப்புக்கு வரும் ஹிந்துக்கள் காதில் கடுக்கண் அணியக்கூடாது. சமயச் சின்னங்கள் நெற்றியில் இடக்கூடாது. முகமதியர்கள் தாடியை அகற்றி மீசை வைத்துக் கொள்ள வேண்டும். தலையில் பசுத் தோல் சுங்கு தொங்கும் குல்லாய் அணிய வேண்டும். மார்பருகில் சிலுவை சின்னம் அணிய வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்தனர். தங்களை மதம் மாற்ற வைக்கிறார்கள் என்ற எண்ணம் இந்திய படை வீரர்களுக்கு ஏற்பட்டது. இவை அனைத்தும் தங்கள் பண்பாட்டிற்கு ஒவ்வாதது என கருதி இதை எதிர்த்தனர். 1806ம் ஆண்டு மே மாதம் லெப்டினென்ட் கர்னல் டேர்லி, 'இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய அணிகலன்களில் மாற்றங்களில் மன நிறைவு இல்லை' என மதராஸ் படைக்கு தகவல் தெரிவித்தார். புது ஆணையை எதிர்ப்பவர்கள் மதராஸுக்கு அனுப்பப்பட்டு, விசாரணை செய்த பின்னர் 500க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் கோட்டையில் உள்ள புளிய மரத்தில் தூக்கில் போடப்பட்டனர். 2,000 பேர் கோல்கத்தாவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதை அறிந்து புரட்சி செய்த ராணுவ வீரர்களை தற்காலிகமாக நீக்கி 23வது ரெஜிமெண்டில் சேர்க்கப்பட்டனர். இது போன்ற கடுமையான தண்டனைகள் இந்திய சிப்பாய்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த கடுமைகளே வேலூர் சிப்பாய் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது. பின்னர் அது புரட்சியாக வெடித்தது. வேலூர் கோட்டையில் இருந்த இந்திய சிப்பாய்கள் புரட்சி செய்ய ஜூலை 14ம் தேதியை தேர்ந்தெடுத்தனர். இந்திய சிப்பாய்கள் புரட்சி செய்யும் திட்டத்தை முஸ்தபா பேக் என்ற சிப்பாய் கர்னல் போர்ப்ஸ் என்ற ராணுவ அதிகாரியிடம் தெரிவித்து விட்டார். இதை அறிந்த சிப்பாய்கள் புரட்சியை திப்பு சுல்தானில் மகளுக்கு திருமணம் நடக்கும் ஜூலை 10ம் தேதிக்கு திடீரென மாற்றினர். கி.பி., 1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு இந்திய வீரர்கள் அணி வகுப்பு மரியாதை நடக்கும் இடத்துக்கு வந்தனர். பிரிட்டிஷ் வீரர்கள் இந்திய வீரர்களைச் சுடுகின்றனர் என்ற தவறான தகவல் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷார் இருப்பிடங்களுக்குச் சென்று 250 அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். மேலும், 500 பிரிட்டிஷ் வீரர்களை சுட்டுக் கொன்றனர். கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கில அரசின் னியன் ஜாக் கொடியை இறக்கி, திப்பு சுல்தானில் புலிக் கொடியை ஏற்றினர். கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் என்பவர் அப்போது ராணிப்பேட்டையில் இருந்த பிரிட்டிஷார் குதிரை படைக்கு தகவல் கொடுத்தார். அரை மணி நேரத்தில் 5,000 பேர் கொண்ட குதிரை படைகள் வேலூருக்கு வந்து கோட்டையின் தலைவாயில் கதவுகளைத் தகர்த்து உள்ளே சென்றது. தலைமை அற்ற நிலையில் புரட்சி செய்த 850 இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர். அப்போது, கோட்டை திப்பு மஹாலில் திப்பு சுல்தானின் மகளுக்கு திருமணம் நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் சிப்பாய்கள் கோட்டை தகர்த்ததை அறிந்து திப்புவின் குடும்பத்தினர் திருமணத்தை பாதியில் நிறுத்தி விட்டனர். பிரிட்டிஷ் சிப்பாய்கள் தங்களை பிடித்து மானபங்க படுத்தி விடுவர் என்று பயந்து அங்கிருந்த கிணற்றில் 500க்கும் மேற்பட்ட திப்புவின் உறவுப் பெண்கள் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த நேரத்தில் அங்கு வந்த பிரிட்டிஷ் வீரர்கள் 125 திப்புவின் உறவினர்களை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்றனர். பின்னர் கோட்டையில் பறந்து கொண்டிருந்த திப்பு சுல்தானின் புலிக்கொடி இறக்கப்பட்டு யூனியன் ஜாக் கொடி ஏற்றப்பட்டது. கோட்டையில் பல இடங்களில் இருந்த 600 இந்திய சிப்பாய்களை பிடித்து வேலூர், திருச்சி சிறைகளில் அடைத்தனர். 17 இந்திய அதிகாரிகள் வேலூர் கோட்டைக்கு மேற்கில் அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். புரட்சியை தூண்டிய 750 இந்திய சிப்பாய்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கோட்டைக்கு மேற்கு பகுதியில் இருந்த புளிய மரத்தில் தூக்கில் போட்டனர். 1806ம் ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையில் நடந்த ஒரு நாள் சிப்பாய் புரட்சி தான் பின்னாளில் இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னோடியாக அமைந்தது.

சுதந்திரம் பெற போராடி கண் இழந்த தியாகி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் 1942 ஆகஸ்ட் 9ம் தேதி, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தீவிரமாக நடந்தது. ஆங்கில ஆட்சி மீண்டும் அடக்குமுறை வெறியாட்டத்தை கடை பிடித்தது. போராட்டம் நடத்திய காந்தி, வல்லபாய் படேல், நேரு உள்பட பல முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்தது. அதனால், சுதந்திர போராட்டம் வீறு கொண்டு எழுந்தது. தபால் நிலையம் எரிப்பு, டெலிஃபோன் கம்பம், ரயில் தண்டவாளங்கள் தகர்ப்பு என போராட்டம் உச்சகட்ட நிலையை அடைந்தது. சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ராஜூ முதலியார் மகன் நாராயணன் 1931 மே 18ல் பிறந்தார். சேலம் டவுன் கிச்சிபாளையம் முனிசிபல் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, ஆகஸ்ட் புரட்சி கொளுந்து விட்டு எரிந்தது. நாராயணன் மற்றும் நண்பர்கள் சேலத்தில் உள்ள அனைத்து சுவர்களிலும், 'வெள்ளையனே வெளியேறு' என, எழுதி நோட்டீஸ் ஒட்டினர். தலைமையாசிரியர் புகாரின் போரில் போலீஸாரால் கைது செய்து, சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அடைத்தனர். அப்போது, பிரிட்டீஷ் டி.எஸ்.பி., பிரம்பால் அடித்ததில் நாராயணனுக்கு இடது கண்ணில் ரத்தம் கொட்டியது. 15 நாள் சிறைக்கு அனுப்பப்பட்டார்.சேலம் கூடுதல் நீதிபதியால் தேசிய பாதுகாப்பு சட்டப்படி ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். சிறையில் உடனிருந்த கைதிகளுக்கு, அவர்கள் சாப்பிடும் தட்டை கழுவும் பணி தரப்பட்டது. ஓராண்டு சிறை வாசம் முடித்து வெளிவந்தார். தன் ஒரு கண்ணையே இழந்து போராடிய நாராயணன் போன்ற எண்ணற்றவர்களால் தான், இந்தியா சுதந்திரம் பெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us