/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/மன்னார்குடி-நீடாமங்கலம் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்மன்னார்குடி-நீடாமங்கலம் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
மன்னார்குடி-நீடாமங்கலம் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
மன்னார்குடி-நீடாமங்கலம் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
மன்னார்குடி-நீடாமங்கலம் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
ADDED : ஜூலை 26, 2011 12:36 AM
மன்னார்குடி: ''மன்னார்குடி- நீடாமங்கலம் ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக அமைந்தது.,'' என்று மத்திய ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தினேஷ்குமார் சிங் கூறினார்.
மன்னார்குடி தொகுதி மக்களின் 30 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் வகையில், மத்திய ரயில்வே நிலைக்குழுத்தலைவரும், எம்.பி.,யுமான டி.ஆர்.பாலுவின் முயற்சியினால், மன்னார்குடி-நீடாமங்கலம் ரயில்பாதை திட்டத்துக்கு மத்திய அரசு 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. மன்னார்குடி- நீடாமங்கலம் ரயில்பாதை திட்டம், கடந்த 10 மாதங்களில் ரயில்பாதை அமைக்கப்பட்டு, நேற்றுடன் ரயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டன. ரயில்பாதை சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. மத்திய ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தினேஷ்குமார் சிங் தலைமையில் நீடாமங்கலத்தில் துவங்கிய ஆய்வில், 10 மீட்டர் தூரத்தில் ரயில்பாதையில் குறை இருப்பது கண்டறியப்பட்டது. அதை உடனடியாக சரி செய்ய, பாதுகாப்பு அதிகாரி தினேஷ்குமார் சிங் உத்தரவிட்டார். தொடர்ந்து, மன்னார்குடி வரை ரயில்பாதை சோதனை ஓட்ட ஆய்வு நடந்தது. மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் பிரிவுகள், பயணிகள் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறைகளை தினேஷ்குமார் சிங் ஆய்வு செய்தார். முதற்கட்ட சோதனை ஓட்டம் சிறப்பாக இருந்ததால், இரண்டாவதாக ஐந்து பெட்டிகள் பொருத்திய ரயிலை, 100 கி.மீ., வேகத்தில் ஓட்டி சோதனை செய்தனர். ஆய்வு குறித்து, பாதுகாப்பு அதிகாரி தினேஷ்குமார் சிங் கூறியபோது, ''சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக அமைந்தது. இன்னும் ஒரு சில பணிகள் மட்டுமே பாக்கியுள்ளன. சரி செய்த பின், பயணிகள் ரயில் இயக்கப்படும்,'' என்றார். ஆய்வின்போது, திருச்சி மண்டல மேலாளர் வைத்தியலிங்கம், ரயில்வே முதன்மை பொறியாளர் சுபான் சர்மா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர். 30 ஆண்டுக்கு பின் ரயில் ஓடியதை பார்த்து, ரயில்வே ஸ்டேஷன் வந்த மன்னார்குடி மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.