Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/போதிய மின் ரயில்கள் இல்லாததால் பயணிகள் தவிப்பு திருத்தணிவாசிகள் தினந்தோறும் அவதி

போதிய மின் ரயில்கள் இல்லாததால் பயணிகள் தவிப்பு திருத்தணிவாசிகள் தினந்தோறும் அவதி

போதிய மின் ரயில்கள் இல்லாததால் பயணிகள் தவிப்பு திருத்தணிவாசிகள் தினந்தோறும் அவதி

போதிய மின் ரயில்கள் இல்லாததால் பயணிகள் தவிப்பு திருத்தணிவாசிகள் தினந்தோறும் அவதி

UPDATED : ஜூலை 27, 2011 03:15 AMADDED : ஜூலை 27, 2011 03:14 AM


Google News
திருத்தணி : திருத்தணியில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு போதிய மின்சார ரயில்கள் இயக்கப்படாததால், ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் நோயாளிகள் அவதிப்படுவது தொடர் கதையாகி வருகிறது.திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பொதட்டூர்பேட்டை, கனகம்மாசத்திரம், பள்ளிப்பட்டு, சிவாடா, அருங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்கு தினசரி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளும் திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சென்று வருகின்றனர்.திருத்தணியில் இருந்து, அதிகாலை 5, காலை 5.40, காலை 6.20 மற்றும் காலை 7 மணி ஆகிய நேரங்களில் தான், சென்னை சென்ட்ரலுக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதிலும் காலை 7 மணிக்கு செல்லும் ரயில், திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக சென்னை வரை செல்கிறது. இதில் திருப்பதியில் இருந்தே பயணிகள் ஏறி வருவதால், திருத்தணி ரயில் நிலையம் வரும் போது, பெட்டிகளில் கால்வைப்பதற்கு கூட இடம் இல்லாததால் பெரும்பாலான பயணிகள் இதில் ஏறுவதில்லை.

காலை 7 மணி மின்சார ரயிலை தொடர்ந்து, காலை 9.40 மணி வரை திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயில் கிடையாது. இதனால் சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள்,நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடிவதில்லை. காலை 9.40 மணிக்கு பிறகு மதியம் 1.10 மணிக்குத் தான் மீண்டும் சென்னைக்கு ரயில் இயக்கப்படுகிறது. மாலை 5, மாலை 6 மணிக்கு பிறகு இரவு 8.20 , 9.30 மணிக்கு தான் மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. திருத்தணியில் இருந்து நேரிடையாக சென்னை செல்வதற்கு, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பஸ் என்ற அளவில் தான் பஸ்களும் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மின்சார ரயிலை தான் நம்பியுள்ளனர்.சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களையும், திருத்தணி வரை நீட்டித்தால் போதும். அரக்கோணம் - திருத்தணி இடையே உள்ள தொலைவு 13 கி.மீ., தான். அதுவும் அரக்கோணத்திற்கு அடுத்த நிறுத்தமும் திருத்தணி தான்.திருத்தணியில் இருந்து, சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என்பது, திருத்தணி நகர் மற்றும் சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கிராம மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

'நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்'

சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுமா என கேட்டதற்கு, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அனந்தராமன்,''திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, கூடுதல் புறநகர் மின்சார ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இது குறித்து, மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். ரயில்களை ஒரே நாளிலோ அல்லது விரைவிலேயோ அறிவித்து செயல்படுத்துவது சிரமம். இருப்பினும் இதுகுறித்து கவனிக்கப்படும்,'' என்றார்.

பி.நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us