Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டருக்கான டெண்டர் திறப்பு

இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டருக்கான டெண்டர் திறப்பு

இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டருக்கான டெண்டர் திறப்பு

இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டருக்கான டெண்டர் திறப்பு

UPDATED : ஜூலை 11, 2011 11:35 PMADDED : ஜூலை 11, 2011 10:36 PM


Google News

தமிழகத்திலுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவசமாக அரசு வழங்கவிருக்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி சப்ளை செய்வதற்கான தொழில்நுட்ப டெண்டர் விண்ணப்பங்கள் நேற்று திறக்கப்பட்டன. மொத்தம் 55 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன.'அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் குடும்பங்களுக்கும் இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும்' என, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி, வரும் 'செப்., 15ம் தேதி முதல், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக்சி, கிரைண்டர் மற்றும் மேஜை மின்விசிறி வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மூன்று பொருட்களையும் சப்ளை செய்யும் நிறுவனங்களை, தேர்வு செய்யும் டெண்டருக்கான விண்ணப்பங்கள் பெறுதல், கடந்த ஜூன் 4ம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிந்தது.சென்னை புரசைவாக்கத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில், மூன்று பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மிக்சிக்கான விண்ணப்பம் பெறுவது, காலை 11 மணிக்கு முடிந்ததால், 11.30 மணிக்கு திறக்கப்பட்டன. 'டேபிள் டாப்' கிரைண்டருக்கான விண்ணப்பங்கள், நண்பகல் 1.30 மணிக்கும், மேஜை மின்விசிறிக்கு பிற்பகல் 2.30 மணிக்கும் திறக்கப்பட்டன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் வீரசண்முகமணி தலைமையில், நுகர்பொருள் வாணிபக் கழக வர்த்தக பிரிவு அதிகாரிகள், தர சோதனை பிரிவு, தொழில்துறை, வணிக வரித்துறை, மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்), மருத்துவப்பணிகள் கழகம் ஆகிய துறை அதிகாரிகள், தொழில்துறை ஆடிட்டர்கள், வணிக வரித்துறை ஆலோசனைக் குழுவினர் மற்றும் சட்ட ஆலோசகர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் முன், டெண்டர் பெட்டிகள் திறக்கப்பட்டன. டெண்டர் திறக்கும் நிகழ்வு முழுவதும், வீடியோ படமாக எடுக்கப்பட்டது. அனைத்து நிறுவனங்களும், இரண்டு வகையான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. இதில், தொழில்நுட்ப டெண்டர் விண்ணப்பங்கள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. விலை நிர்ணயம் குறித்த, விண்ணப்பங்கள், சீலிட்ட கவரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அவை ஒரு வாரத்திற்கு பின், திறக்கப்பட உள்ளது.தொழில்நுட்ப விண்ணப்பத்தில், அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங்கள் நிறுவனம் எவ்வாறு செயல்படும், நிறுவனத்தரம், நிறுவன உற்பத்தி திறன், தரம், சேவை குறித்த விவரங்கள், தொழிற்சாலை, பரிசோதனைக் கூடம் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. டெண்டரில் பங்கேற்பதற்கான நிறுவன அங்கீகார சான்று, நிறுவனங்களின் சுயவிவரங்கள், மாதிரி பொருட்களுக்கான பரிசோதனைக்கூட அண்மைக்கால சான்றிதழ், ஐந்து லட்ச ரூபாய்க்கான வங்கி வரைவோலை, 'வாட்' மற்றும் வணிகவரி சான்றிதழ், வருமானவரி கணக்கு, நிறுவன கணக்கு பேலன்ஸ் ஷீட், கறுப்புப் பட்டியலில் இல்லை என்பதற்கான சான்றிதழ், பொருட்களை தயாரிக்கும் வீடியோ காட்சிகள் உள்ளிட்ட 22 ஆவணங்கள், டெண்டரில் கேட்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த ஒவ்வொரு நிறுவனத்திடமும், அவர்களது தயாரிப்பு பொருட்களின் இரண்டு 'சாம்பிள்கள்' மற்றும் அவற்றை பரிசோதித்த சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. நேற்றைய டெண்டர் திறப்பில் பங்கேற்ற அதிகாரிகள், தொழில்நுட்ப கமிட்டி, டெண்டர் திறப்புக்கமிட்டி மற்றும் பரிசீலினை கமிட்டி என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, டெண்டர்கள் திறந்து பரிசீலிக்கப்பட்டன. இதுகுறித்து, சிவில் சப்ளைஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது,'பல்துறை வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். பின், அரசு அமைத்துள்ள 30 குழுக்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விவரக்கோப்புடன், தொழில் நிறுவனங்களின் அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் நேரடி ஆய்வு நடத்தி, உண்மை நிலை அறிக்கை தருவர். இதையடுத்து, தகுதி பெறும் நிறுவனங்களின் விலை நிர்ணய டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படும்' என்றார். குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்: அனைத்து பொருட்களும், சூடாகாத வகையிலும், தரமான, உடையாத பொருட்களை பயன்படுத்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேஜை மின்விசிறியை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இறக்கைகளை மூடியிருக்கும் வலைக் கம்பிகளில், குழந்தைகள் விரலை விட்டுவிடாத அளவுக்கு நெருக்கமாக, பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களும், பச்சை நிறத்தில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெண்டர் முடிவாவது எப்படி?

* டெண்டர் பெட்டிகள் திறந்து, தொழில்நுட்ப விண்ணப்பங்கள் பரிசீலனை.

* பரிசீலனைக் கமிட்டி ஆவணங்களை ஆய்வு செய்தல்.

* சாம்பிள்கள் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தொழில் நுட்ப கமிட்டி ஆய்வு.

* நிறுவனங்களின் வரவு, செலவு உற்பத்தி கணக்குகளை ஆடிட்டர்கள் ஆய்வு.

* அங்கீகார சான்றிதழ்கள் பரிசோதனை.

* நிறுவனங்களுக்கு மூவர் குழு நேரில் சென்று உண்மை நிலை ஆய்வு.

* நேரடி ஆய்வில் சந்தேகமிருந்தால், இரண்டாவது குழு நேரில் மறு ஆய்வு.

* ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தல்.

* தகுதி பெறும் நிறுவனங்களின் 'விலை' டெண்டர் திறப்பு.

* அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்தல்.

* முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் டெண்டர் இறுதி முடிவு.



பிரபல நிறுவனங்கள் போட்டி

மிக்சி: மகாராஜா, பட்டர்பிளை, பிஜியன், விஜய், கிராம்ப்டன் க்ரீவ்ஸ், காஞ்சன், சவுபாக்யா உட்பட 15 நிறுவனங்கள்.

டேபிள் டாப் கிரைண்டர்: ஆர்.எம்.பி., சவுபாக்யா, என்.ஜி.ஆர்., பி.எல்., இன்டஸ்ட்ரீஸ், ஜீனஸ், அருண் இண்டஸ்ட்ரீஸ் உட்பட 19 நிறுவனங்கள்.

மேஜை மின்விசிறி: வீனஸ், மார்க், வீ கார்டு, கிராம்ப்டன் க்ரீவ்ஸ், வீடியோகான், உஷா, ஒரியன்ட், பஜாஜ் உட்பட 21 நிறுவனங்கள்.



-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us