PUBLISHED ON : ஆக 04, 2011 12:00 AM

எல்லாருக்கும் அக்கா...!
சென்னை அண்ணாநகர் தொகுதி அலுவலகத்தில், அமைச்சர் கோகுல இந்திரா பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து, நலத்திட்டங்கள் வழங்க இருப்பதாக தகவல் கிடைத்தது. செய்தி சேகரிக்க, பத்திரிகையாளர்கள் குவிந்தனர். அ.தி.மு.க., நிர்வாகிகளும் அங்கு திரண்டனர். இளைஞர் ஒருவர் ஓடிவந்து, 'அக்கா(கோகுல இந்திரா) இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க; உள்ள போய் உட்காருங்க...' என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
பத்திரிகையாளர்கள் அறைக்குள் சென்றதும், அங்கிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், 'இது அக்கா ரூம்... பக்கத்து ரூம்ல உட்காருங்க...' என்றார். திடீரென ஹார்ன் அடித்தபடி சைரன் கார் அங்கு வந்ததும், அந்த அறையில் இருந்த முதியவர் ஒருவர் எழுந்து நின்று, 'அக்கா வந்துட்டாங்க...' எனக் கூறியபடியே வெளியேறினார். இதைப் பார்த்த நிருபர் ஒருவர், 'வயசு வித்தியாசமே இல்லாம, எல்லாருக்குமே அமைச்சர் அக்கா தான் போலிருக்கே...' என, 'கமென்ட்' அடித்ததும் அனைவரும் சிரித்தனர்.
விவசாயிகளை சமாளித்த அதிகாரிகள்...!
செங்கல்பட்டில் விவசாயிகள் குறை தீர் கூட்டம், கலெக்டர் சிவ சண்முகராஜா தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும், விவசாயிகள், 'கடந்த கூட்டங்களில் கொடுத்த புகார் மனுக்கள் மீதான நடவடிக்கை விவரத்தை முதலில் தெரிவியுங்கள்' என்றனர். அதை ஏற்று, அதிகாரி ஒருவர் ஒவ்வொரு மனுவாகப் படித்து, 'அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது... இதுகுறித்து பரிசீலிக்கப்படுகிறது...' என்று பதில் தெரிவித்தபடி இருந்தார். அதைக் கேட்ட விவசாயிகள், 'இது ஒரு பதிலா...?' என, ஆவேசப்பட்டனர். அவர்களிடம் கலெக்டர்,'புகார் மனுக்களை பொத்தாம் பொதுவா கொடுத்தால் இப்படிதான் பதில் கிடைக்கும்' என்றார். விவசாயிகள் எதிர்த்துப் பேசியதும் அங்கு வாக்குவாதம் அதிகரித்தது. உடனே அதிகாரிகள், தாங்கள் கொண்டு வந்த சால்வை மற்றும் சந்தன மாலைகளை கலெக்டருக்கு அணிவித்தனர். சில சால்வைகளை, கோபமாக பேசிய விவசாயிகளிடம் கொடுத்து, கலெக்டருக்கு அணிவிக்க வைத்து, கூட்டத்தை சமாதானமாக முடித்து, கலெக்டரை அனுப்பி வைத்தனர். அதை கண்ட விவசாயி ஒருவர், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்ச மாதிரி, கோபமா இருந்த விவசாயிகளை விட்டே, கலெக்டருக்கு சால்வை போட வச்சு திசை திருப்பிட்டாங்களே...' என, 'கமென்ட்' அடித்துவிட்டு கிளம்பினார்.