ADDED : ஜூலை 25, 2011 01:55 AM
காரமடை : சாலை பணி தாமதமாகி வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காரமடை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
இதில் 8,9 வார்டுகள் வழியாக பெள்ளாதி ரோடு செல்கிறது. இந்த ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் சீரமைக்க மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், 10 மாதங்களுக்கு முன் கான்ட்ராக்டர் ஒருவர், ரோடு போட 15 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்தார். 'ஒர்க் ஆர்டர்' கொடுத்து பல மாதங்கள் ஆன பிறகு, நான்கு மாதங்களுக்கு முன் பணிகளை துவக்கினார். பெள்ளாதி, கருப்பராயன் நகர், சின்னக்காரனூர், சிக்காரம்பாளையம், திரு.வி.நகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் இந்த ரோடு வழியாக காரமடைக்கு வந்து செல்கின்றனர். பொக்லைனால் ரோட்டை தோண்டி சமன் செய்து, ஜல்லிக் கற்களை ரோட்டின் ஓரத்தில் கொட்டியுள்ளனர். அதன் பிறகு பணிகள் ஏதும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். ரோடு போடாததால், மக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் கான்ட்ராக்டர் ரவிச்சந்திரனுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.