விசைத்தறி ஸ்டிரைக் எதிரொலி: தொழிலாளர்கள் பரிதவிப்பு
விசைத்தறி ஸ்டிரைக் எதிரொலி: தொழிலாளர்கள் பரிதவிப்பு
விசைத்தறி ஸ்டிரைக் எதிரொலி: தொழிலாளர்கள் பரிதவிப்பு
கோவை: கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பத்து நாட்களாக தொழிலாளர்கள் வருமானத்தை இழந்து தவிக்கின்றனர்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், கருமத்தம்பட்டி, சூலூர், வாகராயம்பாளையம், தெக்கலூர், அவிநாசி, மங்கலம், திருப்பூர், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. கடந்த 30ம்தேதி முதல், கூலி உயர்வு கேட்டு, விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள நெசவாளர்கள், தார் ஓட்டும் தொழிலாளர்கள், அச்சு பிணைக்கும் தொழிலாளர்கள், ஜாப்பர்கள், தறி குடோன்களுக்கு பாவு எடுத்து செல்லும் ஆட்டோ - வேன் டிரைவர்கள், பாவு மற்றும் காடாத் துணிகளை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்கள், நாட்டிங் மிஷின் தொழிலாளர்கள், வேலை இழந்துள்ளனர்.சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும், வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், தொழிலாளர்கள் வேலை இழப்பு அதிகரித்துள்ளது.கடந்த 6ம்தேதி, திருப்பூர்,கோவை கலெக்டர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வரும் 13ம் தேதி நடைபெறும் அடுத்த பேச்சுவார்த்தையிலாவது, தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தொழிலாளர்கள், விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.