/உள்ளூர் செய்திகள்/சேலம்/தனியார் வங்கி "ஏடிஎம்'களின் அவல நிலை :பணம் வராது; ரசீது மட்டும் வரும்தனியார் வங்கி "ஏடிஎம்'களின் அவல நிலை :பணம் வராது; ரசீது மட்டும் வரும்
தனியார் வங்கி "ஏடிஎம்'களின் அவல நிலை :பணம் வராது; ரசீது மட்டும் வரும்
தனியார் வங்கி "ஏடிஎம்'களின் அவல நிலை :பணம் வராது; ரசீது மட்டும் வரும்
தனியார் வங்கி "ஏடிஎம்'களின் அவல நிலை :பணம் வராது; ரசீது மட்டும் வரும்
UPDATED : ஆக 15, 2011 02:33 AM
ADDED : ஆக 15, 2011 02:26 AM
சேலம்: சேலத்தில், தனியார் வங்கிகளின் 'ஏடிஎம்'களில், பணம் எடுக்காத நிலையில், பணம் பெற்றுக்கொண்டதாக கிடைக்கும் ரசீதால், வாடிக்கையாளர்கள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், 137 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், 50 தனியார் வங்கிகளும், 36 கூட்டுறவு துறை சங்கங்களும், ஆறு விவசாய வங்கிகளும், எட்டு நகர கூட்டுறவு வங்கியும், 3 பல்லவன் கிராம வங்கியும் செயல்பட்டு வருகின்றன. 20 லட்சம் வாடிக்கையாளர்கள் இவ்வங்கிகளில் தொழில் ரீதியான கணக்கையும், சேமிப்பு கணக்கையும் வைத்துள்ளனர். பெரும்பாலான வங்கிகள், வாடிக்கையாளர்களின் நலனுக்காக பணம் எடுக்கும் 24 மணி நேர 'ஏடிஎம்' மையங்களை அமைத்துள்ளனர். சேலம் மாநகரப் பகுதியில், 500க்கும் மேற்பட்ட 'ஏடிஎம்' மையங்கள் உள்ளன. சில தனியார் வங்கி 'ஏடிஎம்'களில், பணம் எடுப்பதில் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிரமம் நிலவுகிறது. பணம் எடுப்பதற்காக 'ஏடிஎம்' கார்டை செலுத்தினால், வாடிக்கையாளர் கேட்கும் தொகையை பெற்றுக்கொண்டதாக கணக்குக்காட்டி, ரசீதை வெளியே தள்ளுகிறது. அவசர தேவைக்கு பணம் எடுப்போர், பணம் பறிபோனது கண்டு அதிர்ச்சியடைகின்றனர். பிரச்னையை தீர்ப்பதற்குரிய இலவச தொலைபேசி சேவை எண்களும், மையங்களில் குறிப்பிடப்படாமல் இருக்கிறது. விடுமுறை நாட்களில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், வாடிக்கையாளர்கள் பலர் 24 மணி நேரம் வேதனையில் துடிக்கும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். தொடர்ந்து, சம்மந்தப்பட்ட வங்கியின் மேலாளரை தொடர்பு கொண்டு, சம்பவத்தை கடிதமாக எழுதி கொடுத்து, பணத்தை மீட்பதற்குள் நொந்து போகின்றனர். அதிகாரிகளின் அலட்சியம், சாமான்ய மக்களை அவதிக்குள்ளாக்குகிறது. பெரும்பாலான 'ஏடிஎம்'களில், பணம் இருப்பது இல்லை. கார்டை செலுத்தினால், அவை உள்ளே மாட்டிக்கொள்வதுடன், வாடிக்கையாளரும் அங்கு இக்கட்டான நிலையில் மாட்டிக்கொள்கிறார். காட்சி பொருளாக பல 'ஏடிஎம்' சென்டர்கள் உள்ளன. இரவு நேரங்களில், 'ஏடிஎம்' சென்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களும், பணம் வராது, வேறு சென்டரை போய் பாருங்கள் என விரட்டியடிக்கின்றனர். இரவு, பகல் பாராது உழைக்கும் பணத்தை பத்திரமாக சேமிக்கவே, அனைவரும் வங்கியை நாடுகின்றனர். அவர்களுக்கு சேவை செய்ய அதிகாரிகள் தயங்குவதால், மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு தான் மிஞ்சுகிறது. சேலம் சிண்டிகேட் வங்கி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் கூறியதாவது: 'ஏடிஎம்' சென்டர்களில், பணம் பெறாமலேயே, பணம் எடுத்துள்ளதாக ரசீது வருமானால் கவலைப்பட தேவையில்லை. கம்ப்யூட்டர் பிரச்னையால், அதுபோன்று ஏற்படலாம். ஒரு நாள் முடிவில், அந்த கம்ப்யூட்டர் மீண்டும் சுழற்சிமுறையில் பணம் எடுத்த வாடிக்கையாளர் பட்டியலை தயார் செய்யும். அப்போது, பணம் எடுக்காமல், பெற்று விட்டதாக வருவோர், கணக்கில் தானாக சேர்ந்து விடும். சம்மந்தப்பட்ட வங்கி கிளை மேலாளரிடம் கடிதம் வழங்கி, உங்களது பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்குள், வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 100 ரூபாய் வீதம் அபராதத்துடன் வங்கி செலுத்த நேரிடும். அதனால், ஒரே நாளிலேயே பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் வழங்கிவிடும். இப்பிரச்னையில், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.