ADDED : ஜூலை 25, 2011 09:37 PM
பெ.நா.பாளையம் : 'இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் செய்முறையோடு, தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்' என, திருவனந்தபுரம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழக முன்னாள் இணை இயக்குனர் பேராசிரியர் உன்னிகிருஷ்ண மேனன் பேசினார்.துடியலூர் அருகே ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னணு மற்றும் மின்னணுவியல் அசோசியேஷன் துவக்க விழா நடந்தது.
விழாவை, துறை தலைவர் பேராசிரியர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். முதல்வர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருவனந்தபுரம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக முன்னாள் இணை இயக்குனர் உன்னிகிருஷ்ண மேனன் பேசுகையில்,''மாணவர்கள் ஏதோ, சேர்ந்தோம், படித்தோம் என்று இல்லாமல், தங்களுடைய முழுத்திறமையையும் படிப்பில் காட்ட வேண்டும். செய்முறையோடு, உலகில் உள்ள உயர்ந்த தொழில்நுட்ப திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் சாதிக்கலாம்,'' என்றார். மின்னணு மற்றும் மின்னணுவியல் துறை பொறுப்பாசிரியர் கதிரேசன் நன்றி கூறினார்.