Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அரியும், சிவனும் ஒன்றே! என்பதற்குஎடுத்துக்காட்டாக விளங்கும் குற்றாலம்

அரியும், சிவனும் ஒன்றே! என்பதற்குஎடுத்துக்காட்டாக விளங்கும் குற்றாலம்

அரியும், சிவனும் ஒன்றே! என்பதற்குஎடுத்துக்காட்டாக விளங்கும் குற்றாலம்

அரியும், சிவனும் ஒன்றே! என்பதற்குஎடுத்துக்காட்டாக விளங்கும் குற்றாலம்

ADDED : ஜூலை 30, 2011 02:14 AM


Google News
அரியும், சிவனும் ஒன்றே என்பதற்கு எடுத்துக்காட்டாக குற்றாலம் விளங்குகிறது.குற்றாலம் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக விளங்குவதோடு, சிறந்த புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள குற்றாலநாதர் கோயில் ஆதியில் விஷ்ணு கோயிலாக இருந்தது என கூறப்படுகிறது. தென்திசைக்கு அகஸ்தியர் வந்த போது சிவ பக்தரான அவரை குற்றாலநாதர் கோயிலுக்கு செல்ல விஷ்ணு பக்தர்கள் அனுமதிக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அகஸ்தியர் இக்கோயிலில் உள்ள விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக குற்றாலநாதர் கோயிலின் அமைப்பு சங்கு வடிவத்தை உள்ளதை இன்றும் காணலாம்.

அரியும், சிவனும் ஒன்றே என்பதற்கு எடுத்துக்காட்டாக இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது உண்டு. ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக குற்றாலநாதர் கோயில் திகழ்கிறது. இக்கோயிலுக்கு ஆண்டு தோறும் பல லட்சம் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஐயப்ப சீசன் காலத்தில் சபரி மலைக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குற்றாலம் வந்து அருவிகளில் புனித நீராடி குற்றாலநாதரை வழிபட்டு செல்கின்றனர்.குற்றாலநாதர் கோயில் பின்பக்கம் பொதிகை மலையின் பாறை இடுக்கில் இருந்து புனித நீர் ஊற்று உள்ளது. அருவிகளில் தண்ணீர் இல்லாத போதும், கோடை காலத்திலும் இந்த நீர் ஊற்றில் இருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். சுவை மிகுந்த இந்த தண்ணீர் கோயில் அபிஷேகத்திற்கு பயன்படுவதோடு, சுற்றுலா பயணிகள், கடை வியாபாரிகள் தாகம் தீர்க்கவும் பயன்பட்டு வருகிறது.

கார்த்திகை மாதம் திங்கள் கிழமைதோறும் சோமவாரம் கொண்டாடப்படுகிறது. சோமவாரத்தன்று பெண்கள் மெயின் அருவியில் புனித நீராடி குற்றாலநாதர் கோயிலில் இருக்கும் செண்பக விநாயகரை வழிபட்டு சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் கார்த்திகை சோமவாரத்தன்று அதிகாலையில் இருந்தே அருவியில் புனித நீராடவும், செண்பக விநாயகரை தரிசனம் செய்யவும் பெண்களின் கூட்டம் அலைமோதுவது உண்டு.குற்றாலநாதர் கோயிலை சார்ந்த சித்ரசபையில் இருக்கும் ஓவியங்கள் பண்டை காலத்தில் ஓவிய கலை சிறந்து விளங்கியதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மூலிகைகளால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் இன்றும் கண்ணை கவரும் வகையில் உள்ளன. இக்கோயிலை சார்ந்த செண்பகாதேவியம்மன் கோயில் மெயின் அருவிக்கு மேலே மலை பகுதியில் 5 கி.மீ.தொலைவில் உள்ளது. இக்கோயில் அருவி விழும் அருவிதான் செண்பகாதேவி அருவி என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் சிறப்பானதாகும். திருவிழாவின் போது இரவு நேரம் கோயிலில் பக்தர்கள் தங்கியிருந்து வழிபாடு நடத்துவர். அப்போது மலை பகுதியில் மழை பெய்யும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.குற்றாலம் வரும் நமது நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குற்றாலநாதர் கோயிலுக்கு வந்து செல்வது தனிச்சிறப்பாகும். மனித குலத்தின் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக குற்றாலநாதர் கோயில் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.

-கே.எஸ்.கணேசன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us