Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தயாரிப்பாளர் சங்கம் - கேபிள் "டிவி' ஒப்பந்தத்தில் முறைகேடு: போலீசில் புகார்

தயாரிப்பாளர் சங்கம் - கேபிள் "டிவி' ஒப்பந்தத்தில் முறைகேடு: போலீசில் புகார்

தயாரிப்பாளர் சங்கம் - கேபிள் "டிவி' ஒப்பந்தத்தில் முறைகேடு: போலீசில் புகார்

தயாரிப்பாளர் சங்கம் - கேபிள் "டிவி' ஒப்பந்தத்தில் முறைகேடு: போலீசில் புகார்

ADDED : செப் 14, 2011 12:11 AM


Google News
Latest Tamil News
சென்னை :தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கேபிள் 'டிவி' நிறுவனம் இடையிலான ஒப்பந்தத்தில், 1 கோடியே, 80 லட்ச ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சங்க பொறுப்பு தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட, 60 தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மாலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொறுப்பு தலைவர் சந்திரசேகர், கலைப்புலி தாணு, தேனப்பன், சாலை சகாதேவன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் முறைகேடு செய்து, 1 கோடியே, 80 லட்ச ரூபாய் ஊழல் செய்திருப்பதாக புகாரில் கூறியிருந்தனர்.

இதன் பிறகு நிருபர்கள் சந்திப்பில் சந்திரசேகர் கூறியதாவது:கடந்த மே 13ம் தேதி தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமநாராயணன், செயலர் சிவசக்தி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். கடந்த 11ம் தேதி பிலிம் சேம்பர் தியேட்டரில் சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 230 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டை பலர் கூறினர். குற்றச்சாட்டுகளை எழுத்து பூர்வமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.அதன் அடிப்படையில் சங்கத்தில் கடந்த காலங்களில் நடந்த முறைகேட்டை, 60 தயாரிப்பாளர்கள், எழுத்து பூர்வமாக எழுதி போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ளோம்.கடந்த, 2007ல் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், திரைப்படங்களின் காட்சிகள், பாடல், நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப கேபிள் 'டிவி' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போட்டனர். ஜே.கே. மீடியா மற்றும் விண் மீடியா என இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ஒருவருக்கு ஒப்பந்தம் நிலுவையில் இருந்த போதே, உள்ளூர் தனியார் தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் நலச்சங்கம் என்ற புது நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டனர். இதில் ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற ஜே.கே. மீடியா மற்றும் விண் மீடியா நிறுவன நிர்வாகிகளே, இந்த புது நிறுவனத்துக்கும் நிர்வாகிகள் என்பது தான் வேடிக்கை. இவ்வாறாக ஒப்பந்தத்தை நான்கு முறை மாற்றி மாற்றி போட்டுள்ளனர். ஒப்பந்தங்களில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தலைவர் ராமநாராயணன், செயலர் சிவசக்தி பாண்டியன், சீனிவாசன். பொருளாளர் அழகன் தமிழ்மணி உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் மூலம், 2007 முதல், 2010 வரை சங்கத்துக்கு வரவேண்டிய தொகை, 1 கோடியே, 80 லட்ச ரூபாய். மேலே குறிப்பிட்ட தொகை எங்கு யாரிடம் உள்ளது என்பது தெரியவில்லை. முன்னாள் நிர்வாகிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்கின்றனர். கேபிள் 'டிவி' நிர்வாகிகளிடம் கேட்டால், நாங்கள் கொடுத்து விட்டோம் என்கின்றனர்.முறைகேடு உண்மையாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இத்தொகை கிடைத்தால், ஏழை, எளிய தயாரிப்பாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். கேபிள் 'டிவி' அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. இதுவரை போட்டுள்ள ஒப்பந்தம், இம்மாதத்துடன் முடிகிறது. எனவே, ஒப்பந்தம் முடிந்த பின், சினிமா காட்சிகளையோ, பாடல்களையோ அனுமதியின்றி ஒளிபரப்பக் கூடாது.இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us