நேபாளத்தில் மலையில் மோதி விமானம் விபத்து: 8 தமிழர்கள் உள்பட 19 பேர் பலி
நேபாளத்தில் மலையில் மோதி விமானம் விபத்து: 8 தமிழர்கள் உள்பட 19 பேர் பலி
நேபாளத்தில் மலையில் மோதி விமானம் விபத்து: 8 தமிழர்கள் உள்பட 19 பேர் பலி
UPDATED : செப் 25, 2011 05:10 PM
ADDED : செப் 25, 2011 11:03 AM

காத்மாண்டு: நேபாளம் நாட்டில் பயணிகளுடன் சுற்றுலா சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் மலையில் மோதி விபத்திற்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 8 தமிழர்கள் உள்பட 19 பேர் பலியாயினர்.
நேபாளம் நாட்டிற்கு சொந்தமான புத்தா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான,பி.எச்.ஏ-103 என்ற சிறிய ரக விமானம் ஒன்று இன்று காலை 7.30 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 3 விமான பைலட்டுகள், 19 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் மவுன்ட் எவரெஸ்ட் சிகரப்பகுதிகளுக்கு சுற்றுலா சென்றது. சுற்றுலாவை முடித்துவிட்டு தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் நோக்கி திரும்பி கொண்டிருந்தது.. அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிது நேரத்தில் விமானக்கட்டுப்பாட்டு ரேடாரிலிருந்து மறைந்தது. பின்னர் நேபாளின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாண்டா வனப்பகுதியில் மலையில் மோதி நொறுங்கி விழுந்தது.
அதில் பயணம் செய்த 19 பேரும் பலியாகினர். எவரெஸ்ட் சிகரப்பகுதியில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு காத்மாண்டு திரும்பும் போது மோசமான வானநிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்திற்குள்ளான விமானத்தில் 10 இந்தியர்கள், 6 ஐரோப்பிய சுற்றுலா பயணிகள், 3 விமானிகள் இருந்துள்ளனர். இந்த விபத்தில் 8 தமிழர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். விபத்திற்குள்ளான பகுதிக்கு மீட்பு பணியை மேற்கொள்ள நேபாள் உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேபாள் நாட்டில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தைச் சேர்ந்த மீட்புக்குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பலியான தமிழர்கள் விபரம்: நேபாளம் விமான விபத்தில்பலியானர்களில் தமிழர்கள் 8 பேர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி கட்டுமான சங்கத்தின் திருச்சி கிளை உறுப்பினர்கள் எனவும், இவர்களில் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்தரம், மணிமாறன், மருதாச்சலம், மகாலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்வாராஜ் உறவினர் உள்பட . மேலும் தியாகராஜன், கிருஷ்ணன், தனசேகரன், கனகசபேசன் ஆகியோரும் பலியாயினர். இவர்கள் டில்லியிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இரங்கல்: நேபாளத்தில் 19 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், சுற்றுலாவை முடித்துவிட்டு காத்மாண்டு விமான நிலையத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் மலையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் பலியாயினர். இதில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்ற செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த விமான விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..