Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலர் கைது

பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலர் கைது

பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலர் கைது

பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலர் கைது

ADDED : செப் 30, 2011 01:44 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் அருகே, பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில், தி.மு.க., ஒன்றிய செயலர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த கோலியனூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஜெயச்சந்திரன்,52. இவரது மனைவி சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று முற்பகல் 11.45 மணிக்கு, சாந்தி மனு தாக்கல் செய்தார். பகல் 12.30 மணிக்கு கோலியனூர் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்த தி.மு.க., கோலியனூர் ஒன்றிய செயலர் ஜெயச்சந்திரன், அவரது உறவினர் பெருமாள் மகன் கலைமணி,29, இருவரும் வேட்பாளர்கள் வெளியே செல்லும் வழியில் உள்ளே செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, அவர்களை தடுத்து வேட்பாளர்கள் அனைவரும் உள்ளே செல்லும் வழியில் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் கவிதாவை தரக்குறைவாக திட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து ஒன்றிய செயலர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டரை பிடித்து கீழே தள்ளியதுடன், மிரட்டிவிட்டு அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., சேகர் தலைமையிலான அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மதியம் 1.30 மணிக்கு கலைமணி, ஒன்றிய செயலர் ஜெயச்சந்திரன் இருவரையும் வளவனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக திட்டியது, அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், மானபங்க படுத்துதல், கொலை முயற்சி ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து கலைமணி, ஜெயச்சந்திரன் இருவரையும் வளவனூர் போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை 6 மணியளவில் விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருவரையும் ஆஜர்படுத்தினர். இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டதின்பேரில் அவர்கள் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பரபரப்பு: தி.மு.க., ஒன்றிய செயலர் கைது செய்யப்பட்ட தகவலறிந்த கட்சி நிர்வாகிகள் வளவனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தனர். தி.மு.க., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, சேர்மன் சம்பத், வழக்கறிஞர் கண்ணப்பன் உள்ளிட்டோர், போலீசார் பொய் வழக்கு போடுவதாகக் கூறி கோஷமிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us