/உள்ளூர் செய்திகள்/சென்னை/மெரீனாவில் வித்தை காட்டிய 15 குரங்குகள் மீட்புமெரீனாவில் வித்தை காட்டிய 15 குரங்குகள் மீட்பு
மெரீனாவில் வித்தை காட்டிய 15 குரங்குகள் மீட்பு
மெரீனாவில் வித்தை காட்டிய 15 குரங்குகள் மீட்பு
மெரீனாவில் வித்தை காட்டிய 15 குரங்குகள் மீட்பு
ADDED : ஆக 29, 2011 11:00 PM
வேளச்சேரி : மெரீனா கடற்கரையில் வித்தை காட்டி சம்பாதிப்பதற்காக பெண்கள் மற்றும் வாலிபர்கள் பயற்சி அளித்து வைத்திருந்த 15 குரங்குகளை போலீசார் உதவியுடன், 'புளுகிராஸ்' நிறுவனத்தினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று முன்தினம் அன்னாஹசாரேவின் ஆதரவாளர்கள் ஒன்று கூடி வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சில வாலிபர்கள் குரங்குகளை வைத்து வித்தை காட்டி, பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் குரங்குகளை சித்ரவதை படுத்திக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக புளுகிராசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் உதவியுடன், 'புளுகிராஸ்' நிறுவனத்தினர் அங்கிருந்த குரங்குகளை மீட்டனர். பின் அவற்றை வேளச்சேரி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.இது குறித்து பேசிய வேளச்சேரி, 'புளுகிராஸ்' அமைப்பின் பொது மேலாளர் டான்வில்லியம்,''சென்னை மெரீனா கடற்கரையில் குரங்குகளை வைத்து வித்தை காட்டி பணம் சம்பாதிப்பதாக தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்றபோது, ஒரு பெண் வைத்திருந்த ஐந்து குரங்குகள் மீட்கப்பட்டன. அதைபோல நேற்றும் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, வாலிபர்கள் சில குரங்குகளை வைத்திருந்தனர். போலீசார் உதவியுடன் நாங்கள் சென்றபோது, அவற்றில் ஆறு குரங்குகளை கோணி பையில் அடைத்துவைத்திருந்தனர். அந்த வகையில் பத்து குரங்குகள் மீட்கப்பட்டன. அவை வேளச்சேரி வனச்சரகத்தில் ஒப்படைக்கப்பட்டது,'' என்றார்.
இது குறித்து வேளச்சேரி வனச்சரகர் டேவிட்ராஜ் கூறியதாவது:வித்தை காட்டி சம்பாதிப்பதற்காக சிலர் குரங்குகளை வலை கொண்டு பிடிக்கின்றனர். அதில், சில குரங்குகள் இறந்துவிடும். அவற்றை கடத்தி கொண்டு வரும் போது சில குரங்குகள் இறக்கநேரிடும். பயிற்சி என்ற பெயரில் அடித்து துன்புறுத்துவதாலும் அவை இறந்துபோகும். எனவே, இதுபோன்ற விலங்குகளை பிடிக்கவோ, பயற்சி அளித்து பொதுமக்கள் பொழுபோக்கிற்காக வதைக்க கூடாது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம் மற்றும் காளை ஆகியவற்றை பிடித்து, பயிற்சி அளிக்க கூடாது. வனத்துறைக்கு தெரியாமல் விலங்குகளை பிடித்து கொடுமை செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.எனவே, யாரேனும் இதுபோன்ற விலங்குகளை வைத்து வித்தை காட்டினால் அவர்கள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு வித்தை காட்டுபவர்கள் தாங்கள் வளர்க்கும் விலங்குகளை வனத்துறையிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது. வனத்துறை சார்பில் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு டேவிட் ராஜ் தெரிவித்தார்.